

பாரம்பரியச் சின்னங்கள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு 10 நாள் பாரம்பரிய சாலைப் பயணத்தை ‘தளி’ அமைப்பு இன்று தொடங்குகிறது.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் அந்த அமைப்பின் நிறுவனரும், வரலாற்று ஆர்வலருமான ராஜசேகர் பாண்டுரங் கன் கூறியதாவது: கடந்த ஆண்டுக ளில் காஞ்சிபுரம், புதுக்கோட்டை பகுதிகளுக்கு இருசக்கர வாகனத்தில் பாரம்பரிய சாலைப் பயணம் மேற்கொண்டோம். அப்பகுதியின் பாரம்பரிய சின்னங்கள், பழமையான கோயில்கள் குறித்த வரைபடத்தை உருவாக்கி னோம். அந்த இடங்களுக்கு சென்று வருவதற்கான வழி, குறைந்த கட்டணத்தில் தங்குவதற்கான தரமான விடுதிகள், தரமான உணவு கிடைக்கும் இடங்கள் ஆகிய விவரங்களை வரைபடத்தில் குறிப்பிட்டு இணையத்தில் வெளியிட்டோம்.
இந்த ஆண்டில் பயண நாட்களை அதிகரித்து சென்னை - நெல்லை கார் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். வழியில் திருச்சி, மதுரை, சிவகங்கை கீழடி உள்ளிட்ட பகுதிகளிலும் முகாமிட்டு வரலாற்று, பாரம்பரிய சின்னங்களை தேடுவதுடன் அவை குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த உள்ளோம்.
முகநூலில், ‘சென்னை - திருநெல்வேலி ஹெரிடேஜ் ரோடு டிரிப்’ என்ற பக்கத்தை தொடங்கி உள்ளோம். எங்கள் பயணத்தின் ஒவ்வொரு பதிவும் படங்களுடன் உடனுக்குடன் இதில் பதிவேற்றம் செய்யப்படும். எங்கள் பயணம் ஜூன் 12-ல் நிறைவடைகிறது என்றார்.