Published : 14 Nov 2013 04:27 PM
Last Updated : 14 Nov 2013 04:27 PM

8 மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு: ராமதாஸ் சாடல்

தமிழகத்தில் தினமும் 8 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறையில் உள்ளது என்றும், மின் உற்பத்தியில் தமிழக அரசு படுதோல்வி அடைந்துள்ளது என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில், காற்றாலைகளின் ஆதரவால் கடந்த சில வாரங்களாக ஓய்ந்திருந்த மின்வெட்டு இப்போது மீண்டும் தலைவிரித்தாடத் தொடங்கியிருக்கிறது.

சென்னை மாநகரம் தவிர மாநிலத்தின் மற்ற அனைத்துப் மாவட்டங்களும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன.

கடந்த ஜூலை மாதம் முதல் காற்றாலை மின்னுற்பத்தி அதிகரித்ததால் மின்வெட்டு குறைந்திருந்தது. ஆனால், காற்றாலை மின் உற்பத்தி கைவிட்டதாலும், மின்னுற்பத்தி நிலையங்கள் செயலிழந்ததாலும் தமிழகத்தில் மீண்டும் கடுமையான மின் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தின் மின் தேவை 13 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரித்துள்ள நிலையில், தனியாரிடமிருந்து வாங்கப்படுவது உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களில் இருந்தும் 9000 மெகாவாட் மட்டுமே கிடைக்கிறது.

மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு மின்பற்றாக்குறை இருப்பதால் தினமும் 8 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. பகலில் மட்டுமின்றி, இரவிலும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை, திருப்பூர் உள்ளிட்ட தொழில் மாவட்டங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டு பொருளாதார இழப்பு ஏற்பட்டிருக்கிறது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. தமிழக அரசின் நிர்வாகத் திறமையின்மையே இதற்கு காரணமாகும்.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 3 மின் நிலையங்கள் உட்பட மொத்தம் 7 மின்நிலையங்களில் உள்ள 11 அலகுகள் செயல்படாததால் மொத்தம் 2740 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து இதை சரி செய்ய வேண்டிய மின்துறை அமைச்சரோ, அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஏற்காடு தொகுதியில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

மின்சாரத் தட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்ற அக்கறை அ.தி.மு.க. அரசுக்கு ஒரு போதும் இருந்ததில்லை. அதற்காக எந்த நடவடிக்கையையும் இந்த அரசு மேற்கொள்ளவில்லை. கடந்த இரண்டரை ஆண்டு காலத்தில் மின்னுற்பத்தி தொடர்பாக முதலமைச்சர் அளித்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.

கூடங்குளம் அணுமின்நிலையம் உற்பத்தியைத் தொடங்கினால் தமிழகம் பிரகாசிக்கும் என்று பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தது. அங்கு உற்பத்தி தொடங்கப்பட்டு விட்டதாக கூறப்படும் நிலையில், உற்பத்தியாகும் மின்சாரம் எங்கு செல்கிறது என்பது தான் தெரியவில்லை. கடந்த இரண்டரை ஆண்டுகளில் எந்த புதிய மின் திட்டத்திற்கான பணியும் தொடங்கப்படவில்லை. தமிழ்நாட்டில் பல ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட 11,960 மெகாவாட் திறன்கொண்ட 9 மின் திட்டங்கள் இன்று வரை அறிவிப்பு நிலையில் தான் உள்ளன.

மொத்தத்தில் மின்னுற்பத்தி தொடர்பாக வாக்குறுதிகளை மட்டுமே வாரிவழங்கி வரும் தமிழக அரசு அவற்றை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மின்னுற்பத்தியில் அ.தி.மு.க. அரசு படுதோல்வி அடைந்து விட்டது. இதனால் தமிழகத்தின் வளர்ச்சியும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இனியாவது வெற்று வாக்குறுதிகளை அளிக்காமல், மின்வெட்டை போக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x