

காவல்துறையை வலுப்படுத்தும் விஷயத்தில் இனியும் அலட்சியம் காட்டாமல், காவல்துறை சீரமைப்புக்கான திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''திருவண்ணாமலையில் நகர அதிமுக செயலராகவும், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவராகவும் இருந்த கனகராஜ் கடந்த 12-ம் தேதி காலை தமது நண்பருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மற்றொரு பைக்கில் வந்த கும்பல் அவரை வழிமறித்த மிகவும் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்துள்ளது. இந்த கொலை நடக்கும் காட்சிகள் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளன. அவை இப்போது சமூக ஊடகங்கள் மூலம் வேகமாக பரவி வருகின்றன.
அதன்பிறகும் எந்த பதற்றமும் இன்றி மிகவும் இயல்பாக அங்கிருந்து சென்று அருகில் உள்ள காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளனர். அதேபோல், வேலூர் மாவட்ட அதிமுக முன்னாள் நிர்வாகியும், கல்லூரி அதிபருமான ஜி.ஜி. ரவி என்பவர் வேலூர் - காட்பாடி சாலையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு வெளியே வரும் போது கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தக் கொலைகள் பொதுமக்கள் முன்னிலையிலேயே நடந்திருக்கிறது.
ஒரு காலத்தில் ஸ்காட்லாந்துயார்டு காவல்துறைக்கு இணையானது என்று போற்றப்பட்ட தமிழகக் காவல்துறையின் இன்றைய நிலை மிகவும் மோசமாக உள்ளது. 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 11,600-க்கும் அதிகமான கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன.
கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் 1,818 படுகொலைகள் நடந்திருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. குற்றங்கள் பெருகி வரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. தமிழத்தில் அமைதியை நிலைநாட்டுவதும், மக்கள் அச்சமின்றி வாழ்வதை உறுதி செய்வதும் தான் மக்கள் அரசின் முக்கியக் கடமையாகும். ஆனால், தமிழகத்தில் நிலைமை தலைகீழாக உள்ளது.
மக்கள் சேவை செய்வதற்கு பதிலாக அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போட்டிகளில் தான் ஆளுங்கட்சியினர் தீவிரம் காட்டுகின்றனர். எனவே, காவல்துறையை வலுப்படுத்தும் விஷயத்தில் இனியும் அலட்சியம் காட்டாமல், காவல்துறை சீரமைப்புக்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும். தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.