ரூ. 15,930 கோடி வருவாய் பற்றாக்குறை: தமிழக அரசின் கடன் ரூ.3.14 லட்சம் கோடி - நிதி அமைச்சர் டி.ஜெயக்குமார் தகவல்

ரூ. 15,930 கோடி வருவாய் பற்றாக்குறை: தமிழக அரசின் கடன் ரூ.3.14 லட்சம் கோடி - நிதி அமைச்சர் டி.ஜெயக்குமார் தகவல்
Updated on
2 min read

நடப்பாண்டில் தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.15,930 கோடியாகவும், கடன் நிலுவை ரூ.3 லட்சத்து 14 ஆயிரத்து 366 கோடியாகவும் இருக்கும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி பட்ஜெட்டில் கூறப்பட்டிருப்பதாவது:

தேசிய, உலக பொருளாதார மந்த நிலையில் தமிழகத்தின் சொந்த வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறையால் தமிழகம் மிகப்பெரிய மாற்றத்தை சந்திக்க உள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. மதிப்புக் கூட்டு வரி முறைக்குப் பதிலாக ஜிஎஸ்டி வரி முறை செயல்பாட்டுக்கு வர உள்ளதால் வரிச் சலுகைகள் எதுவும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை.

2017-18-ல் வணிகவரி வருவாய் ரூ.77,234 கோடி, ஆயத் தீர்வை வருவாய் ரூ.6,903 கோடி, முத்திரைத்தாள், பதிவுக் கட்டண வருவாய் ரூ.8,220 கோடி, மோட்டார் வாகன வரி வருவாய் ரூ.5,418 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் நிதியாண்டில் தமிழகத்தின் சொந்த வரி வருவாய் ரூ.99,590 கோடி, வரி அல்லாத வருவாய் ரூ.12,318 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2015-16 முதல் மத்திய அரசு நிதி உதவியில் செயல்படும் திட்டங்களுக்கான நிதியில் தனது பங்கை மத்திய அரசு குறைத்துள்ளது. இதனால் தமிழக அரசின் நிதிச்சுமை கூடியுள்ளது.

மத்திய வரிகளில் மாநில அரசின் பங்காக கிடைக்கும் தொகை 2016-17-ல் ரூ.24,538 கோடி, 2017-18-ம் ஆண்டில் ரூ.27,224 கோடி, மத்திய அரசிடம் இருந்து பெறப்படும் உதவி மானியங்கள் 2016-17-ல்

ரூ.20,709 கோடி, 2017-18-ல் ரூ.20,231 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பற்றாக்குறை ரூ.15,930 கோடி

2017-18 பட்ஜெட்டில் தமிழகத்தின் மொத்த வருவாய் வரவுகள் ரூ.1 லட்சத்து 59 ஆயிரத்து 363 கோடியாகவும், மொத்த வருவாய் செலவினங்கள் ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்து 293 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வருவாய் பற்றாக்குறை ரூ.15,930 கோடியாக இருக்கும்.

2016-17-ல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் ரூ.22,815 கோடி கடனை அரசு ஏற்றுள்ளது. இதனால் மாநிலமொத்த உற்பத்தி மதிப்பில் 3 சதவீதத்தை காட்டிலும் நிதிப்பற்றாக்குறை அதிகரிக்கும். இதற்காக தமிழ்நாடு நிதிநிலை நிர்வாகப் பொறுப்புடைமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும்.

2017-18-ல் நிதிப் பற்றாக்குறை ரூ.41,977 கோடியாக இருக்கும். இது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 2.79 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு உட்பட்டே இருக்கும். 2018 மார்ச் இறுதியில் நிகர கடன் நிலுவை ரூ.3 லட்சத்து 14 ஆயிரத்து 366 கோடியாக இருக்கும். இது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 20.90 சதவீதமாக இருக்கும். இது அனுமதிக்கப்பட்ட 25 சதவீதத்துக்குள் இருக்கும்.

நெருக்கடியான சூழல்

நிதி ஆதாராங்கள் குறைந்து வரும் நெருக்கடியான சூழலில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. உறுதியற்ற நிலையில் உள்நாட்டுப் பொருளாதாரம் இருக்கும் சூழலில் தமிழகத்தின் பொருளாதார நிலையை மீட்டெடுக்கும் கடினமான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in