Published : 03 May 2017 04:32 PM
Last Updated : 03 May 2017 04:32 PM

தமிழக மின் தேவைக்காக 9 கோரிக்கைகள்: டெல்லி மாநாட்டில் அமைச்சர் தங்கமணி பேச்சு

தமிழக மின் தேவைக்காக 9 கோரிக்கைகளை அமைச்சர் தங்கமணி, மத்திய மின்சாரத் துறை அமைச்சரிடம் முன்வைத்துள்ளார்.

எரிசக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் சுரங்கத்துறை மாநில மற்றும் யூனியன் பிரதேச அமைச்சர்கள் மாநாடு இன்று புதுடெல்லியில் நடைபெற்றது.

இதில் தமிழகம் சார்பில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி பங்கேற்றுப் பேசியதாவது: ''ஜெயலலிதாவின் அயராத முயற்சியால் மிக விரிவான திட்ட வரைவு உருவாக்கப்பட்டு, தமிழ்நாடு எரிசக்தித் துறையில் கடந்த ஐந்து வருடங்களில் ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.

மின்பற்றாக்குறை மாநிலமாக இருந்த தமிழகம் தற்போது மின் உற்பத்தியில் மின்மிகை மாநிலமாக திகழ்கிறது. 2011-ம் ஆண்டிலிருந்து மாநில மற்றும் மத்திய தொகுப்பில் புதிய மின் நிலையங்களை இயக்கத்திற்கு கொண்டு வந்ததன் மூலமும், நடுத்தர மற்றும் நீண்டகால ஒப்பந்த அடிப்படையில் மின்சாரத்தை கொள்முதல் செய்ததன் மூலமும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விரிவாக்கம் மூலமும் கூடுதலாக 9924 மெகாவாட் மின்சாரம் தமிழகத்தின் மின்கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.

2013-14 ஆம் ஆண்டில் ரூ.13,985 கோடியாக இருந்த தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இழப்பு 2016-17-ஆம் ஆண்டில் ரூ.3,675 கோடியாக குறைந்துள்ளது. 2017-18 ஆம் ஆண்டில் இழப்பே இல்லாத நிலையை எய்தும்.

மேலும், 2010-11 ஆம் ஆண்டில் ரூ.2.16 ஆக இருந்த சராசரி மின்வழங்கும் வருமானம் மற்றும் சராசரி மின் விற்பனை விலை இரண்டிற்குமான இடைவெளி 2016-17 ஆம் ஆண்டில் ரூ.0.45 (45 பைசா) வாக குறைந்துள்ளது.

தமிழகத்தின் மின்நிலைமையை மேலும் மேம்படுத்தி ஜெயலலிதாவின் தொலைநோக்குப் பார்வை 2023-ன்படி தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை நிறைவேற்றிட தங்களது தொடர்ச்சியான ஒத்துழைப்பையும், ஆதரவையும் நல்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த சில வருடங்களில், மாநிலத்தின் எரிசக்தித் துறையில் குறிப்பிடத்தக்க கூடுதல் மின்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகம் 2016-17 ஆம் நிதியாண்டில் மின் உற்பத்தியில் உச்ச உபரி நிலை அடைந்துள்ளது. மேலும், இனிவரும் வருடங்களிலும் மின் உற்பத்தியில் உபரி நிலை தொடர போதுமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் 2011 ஆம் ஆண்டில் 200 மில்லியன் யூனிட்டாக இருந்த ஒரு நாளைய சராசரி மின் நுகர்வு 2016 ஆம் ஆண்டில் 300 மில்லியன் யூனிட்டாக உயர்ந்துள்ளது. மேலும், இந்த மின் நுகர்வு உயர வாய்ப்பு உள்ளது. மாநிலத்தின் தற்போதைய பூர்த்தி செய்யப்பட்ட மின்தேவை ஏறக்குறைய 13,500 மெகாவாட் முதல் 14,500 மெகாவாட்டாக உள்ளது. இது 15,500 மெகாவாட்டாக மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மின் தேவையை பூர்த்தி செய்ய ஏற்றவாறு தமிழகம் தயார் நிலையில் உள்ளது.

தனிப்பயன் பசுமை மின் வழித்தடம்

தமிழகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின் உற்பத்தியில் நாட்டிலேயே முதலிடம் வகிக்கின்றது. மேலும் இந்த இடத்தை தக்கவைப்பதற்கான அனைத்து முனைப்பான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகத்தின் மொத்த சூரியஒளி மின் சக்தி நிறுவுதிறன் 1693 மெகாவாட் மற்றும் காற்றாலை மின் நிறுவுதிறன் 7845 மெகாவாட் ஆகும். தமிழ்நாட்டின், காற்றாலை மின் நிறுவுதிறனானது இந்தியாவின் மொத்த காற்றாலை மின் நிறுவுதிறனில் 28 விழுக்காடு ஆகும்.

தமிழகத்தில் மேலும் 4500 மெகாவாட் காற்றாலை மற்றும் 4500 மெகாவாட் சூரியஒளி மின் திட்டங்களை வருகின்ற வருடங்களில் படிப்படியாக அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 2016-17 ஆம் ஆண்டில் தமிழகம் எப்போதும் இல்லாத அளவாக சுமார் 13000 மில்லியன் யூனிட் அளவு காற்றாலை மின்சாரத்தையும், 1644 மில்லியன் யூனிட் அளவு சூரியஒளி மின்சாரத்தையும் உற்பத்தி செய்துள்ளது.

தமிழகம், தற்போது மாநிலத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்முதல் நியமத்தை பூர்த்தி செய்து, வெளி மாநிலங்களின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்முதல் நியமம் நிறைவேற்றுவதற்கு ஏதுவாக சுமார் 1,000 மெகாவாட் காற்றாலை மின்சாரத்தை விற்பனை செய்யும் நிலையில் உள்ளது.

சென்ற வருடம் தமிழகம் சுமார் 120 மெகாவாட் திறன் கொண்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மற்ற மாநிலங்களுக்கு விற்பனை செய்துள்ளது. தமிழகத்திலிருந்து கிடைக்கும் உபரி காற்றாலை மின்சாரம் தேவைப்படும் மாநிலங்களுக்கு விற்பனை செய்வதற்கு ஏதுவாக தனிப்பயன் பசுமை மின் வழித்தடத்தை விரைவில் செயல்படுத்த மத்திய மின்சாரத்துறை அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.

சென்னை நகரத்திற்கான பேரழிவு காப்பு

அண்மையில் நிகழ்ந்த வர்தா புயலினால், சென்னை பெருநகரில் உள்ள மின் கட்டமைப்பு மிகவும் சேதம் அடைந்ததால் அதனை மறு சீரமைப்பதற்கு ரூ.1093.27 கோடி கோரப்பட்டது. மேலும், சென்னை பெருநகரமானது புயல், வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடியதாக இருப்பதால் கீழ்கண்ட நிலையான மேம்பாட்டு பணிகள் வருங்காலத்தில் ஏற்படக்கூடிய சேதத்தை குறைப்பதற்காக மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

(1) மேலே செல்லும் 230 கிலோ வோல்ட் மின்கம்பிகளை 230 கிலோ வோல்ட் திறனுடைய புதைவடங்களாக மாற்றுதல்.

(2) தற்போதுள்ள மின்மாற்றி கட்டமைப்புகளை வளைய சுற்றுதர அமைப்புகளாக மாற்றுதல்.

(3) தற்போதுள்ள சாதாரண மின்சார பெட்டிகளை அதிக திறன் கொண்ட 6 வழி மின்சார பெட்டிகளாக மாற்றுதல்.

(4) சென்னை பெருநகரின் மாநகராட்சிக்கு உட்பட்ட மேல்நிலை மின் பாதைகளை பூமிக்கடியில் புதைவடங்களாக மாற்றுதல்.

மேற்கண்ட பணிகளை மேற்கொள்ள சுமார் ரூ.17,000 கோடி தேவைப்படும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள தேவையான ரூபாய் 17,000 கோடி தொகையை மானியமாகவோ அல்லது கிராமப்புற மின் மயமாக்கல் நிறுவனம் மற்றும் மின்விசை நிதி நிறுவனம் ஆகியவற்றின் மூலம் மென்கடனாகவோ அளிக்கும்படி மத்திய மின்சாரத்துறை அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.

இதனால் எதிர் வரும் காலங்களில் சென்னை பெருநகரம் புயல் மற்றும் வெள்ளம் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து நெகிழ் திறன் மிக்கதாக மாறும்.

கூடங்குளம் அணுமின் நிலையம் - அலகுகள் 3 மற்றும் 4

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அலகுகள் 1 மற்றும் 2-ன் மொத்த மின் நிறுவுதிறனான 2000 மெகாவாட்டில் 1125 மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

3வது மற்றும் 4வது அலகிற்கான அடிக்கல்லை பிரதமர் 15.10.2016 அன்று ஏற்கெனவே நாட்டியுள்ளார். மாநில அரசு கூடங்குளம் அணுமின் நிலையமானது சுமுகமாக மின் உற்பத்தியை தொடங்க எடுத்த தீவிர முயற்சிகளையும், அணுமின் நிலையம் தமிழ்நாட்டில் அமைந்துள்ளதால் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளதையும் கருத்திற்கொண்டு அலகுகள் 3 மற்றும் 4-ன் மொத்த மின் உற்பத்தியான 2000 மெகாவாட் மின்சாரத்தையும் தமிழகத்துக்கே ஒதுக்கீடு செய்யும்படி மத்திய மின்சாரத்துறை அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

செய்யூர் மிக உய்ய அனல் மின் திட்டம்

மின்சாரத் தேவை அதிகரித்துக் கொண்டே வருவதால் செய்யூர் மிக உய்ய அனல் மின் திட்டத்திற்கான ஒப்பந்தப் புள்ளி ஏலமுறையை விரைந்து செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய மின்சாரத்துறை அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.

தற்போது, செய்யூர் மிக உய்ய அனல் மின் திட்டத்திற்காக ஒப்பந்தப்புள்ளி கோரும் ஆவணங்களில், 100 சதவீத வெளிநாட்டு நிலக்கரியை உபயோகப்படுத்துவதற்கும், மற்றும் அதனுடன் பயன்பெறுபவரது விருப்பத்திற்கிணங்க 30 சதவீத உள்நாட்டு நிலக்கரியை கலவை செய்து, அதற்கான குறைக்கப்பட்ட மின் உற்பத்தி கட்டணத்துடன் உபயோகப்படுத்துவதற்கும், ஏதுவாக ஒப்பந்தப்புள்ளி கோரும் ஆவணங்கள் உள்ளன.

ஆனால், தற்போது மின் உற்பத்தி செலவினங்களைக் குறைப்பதற்காக மத்திய மின் அமைச்சகம் உள்நாட்டு நிலக்கரியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. ஆகையால் செய்யூர் மிக உய்ய அனல் மின் திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளி கோரும் ஆவணங்களை 100 சதவீத உள்நாட்டு நிலக்கரியை உபயோகப்படுத்தும் விதத்தில் மாற்றி அமைக்க மத்திய மின் அமைச்சகத்தை அறிவுறுத்தும்படி மத்திய மின்சாரத்துறை அமைச்சரிடம் கேட்டுக் கொள்வதுடன், இந்த திட்டத்திற்காக மட்டும் தனி ஒரு நிலக்கரி சுரங்கத்தையும் ஒதுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அதிகம் நிறைந்த மாநிலத்தில் அதிர்வெண்ணுடன் இணைந்த அபராதம் நீக்குதல் தொடர்பாக

தமிழகத்தின் மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின் நிறுவுதிறன் 10,000 மெகாவாட்டிற்கு மேலாகும்.

காற்றாலை மற்றும் சூரியஒளி மின்சக்தியானது கணிசமான உள்நாள் மற்றும் இடைநாள் மாறுபாடுகள் கொண்டது. இத்தகைய கணிசமான மாறுபாடுகள் காரணமாக, 49.90 HZ - 50.05 HZ அதிர்வெண் அலைவரிசைக்குள்ளும், 250 மெகாவாட் ஏற்ற இறக்க வரையறைக்குள்ளும் மின்கட்டமைப்பை செயலாக்கம் செய்வது மிகவும் கடினம். பரிந்துரைக்கப்படும் அதிர்வெண் அலைவரிசையை தக்கவைத்துக் கொள்ள முடியாததால் அபராதம் கட்ட வேண்டியதாக உள்ளது. புதுப்பிக்கதக்க எரிசக்தியை ஒருங்கிணைப்பதற்காக சுமத்தப்படும் இத்தகைய அபராதம் முற்றிலும் நியாயமற்றது. மேலும் அது புதுப்பிக்கதக்க எரிசக்தி கொள்கைக்கு மாறானது.

புதுப்பிக்கதக்க எரிசக்தி அதிகம் நிறைந்த மாநிலமான தமிழகம் போன்ற மாநிலங்கள், இதுபோல் புதுப்பிக்கதக்க எரிசக்தியை ஒருங்கிணைப்பதற்காகவும், ஊக்குவிப்பதற்காகவும் தண்டிக்கப்படுவது நியாயமற்றது. எனவே மத்திய மின்சாரத்துறை அமைச்சர், அதிர்வெண் இணைந்த அபராதத்தை, அதிக காற்று பருவத்தின் போது முற்றிலும் நீக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

அனல்மின் நிலையங்களின் சுற்றுச்சூழல் பற்றிய விபரம்

குறிப்பிட்ட நீர் நுகர்வு

2015, டிசம்பர் ஏழாம் தேதி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அனல் மின் நிலையங்களுக்கான குறிப்பிட்ட நீர் நுகர்வு என்பது ஆற்றுநீரைப் பயன்படுத்தும் அனல் மின் நிலையங்களுக்கு மட்டுமே சாத்தியப்படும் செயலாகும். எனவே கடல் நீரை பயன்படுத்தும் அனல் மின் நிலையங்களை புதிய குறிப்பிட்ட நீர் நுகர்வு கடைப்பிடிப்பதற்கான மேற்கூறிய ஆணையில் இருந்து விலக்கு அளிக்க ஆவன செய்யுமாறு மத்திய மின்சாரத்துறை அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.

புதிய காற்று மாசுபாடு உச்ச வரம்புகள்

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தினால் புதியதாக அறிவிக்கப்பட்டுள்ள காற்று மாசுபாடு உச்ச வரம்புகளைப் பொறுத்தவரை ஏற்கெனவே இயங்கி வரும் மின் நிலையங்களை புதுப்பித்து அதிலிருந்து வெளிவரும் புகைவாயுவில் உள்ள கந்தக-டைஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடுகளை கட்டுப்படுத்துவதற்கான காலக்கெடு டிசம்பர் 2018 உடன் முடிவடைகின்றது.

கந்தக வாயு நீக்கு அமைப்பு, நைட்ரஜன் வாயு நீக்கு அமைப்பு ஆகியவற்றை நிறுவ ரூ.9000 கோடிகள் தேவைப்படும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் பணிச்சுமை, மின் உற்பத்தி நிறுத்தம், முதலீட்டு செலவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்தப் பணிகளை படிப்படியாக மேற்கொள்ள காலக்கெடுவை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கும்படி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தை வலியுறுத்தும்படி மத்திய மின்சாரத்துறை அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.

கடல் நீருக்கான வரி

அனல் மின் நிலைங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடல் நீர் வரியிலிருந்து விலக்கு அளிப்பது குறித்து, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டு, நிலுவையில் உள்ளது. மத்திய மின்சாரத்துறை அமைச்சர் இது குறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துடன் பேசி சாதகமான ஆணையைப் விரைவில் பெற ஆவன செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இறக்குமதி நிலக்கரிக்குப் பதிலாக இந்திய நிலக்கரியை பயன்படுத்துதல்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இறக்குமதி நிலக்கரியை கொள்முதல் செய்வதை நிறுத்தி 100 சதவீதம் இந்திய நிலக்கரியைப் பயன்படுத்த முனைந்துள்ளது.

இருப்பினும் இந்திய நிலக்கரி நிறுவனங்களிடமிருந்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பெற்ற நிலக்கரி, மொத்த இணைப்பில் 58 சதவீதமே ஆகும். குறிப்பாக மகாநதி நிலக்கரி நிறுவனம், தால்ச்சர் நிலக்கரி சுரங்கங்களிலிருந்து மிகக் குறைந்த அளவாக 46 சதவீத நிலக்கரியே வழங்கியது. மேற்படி தால்ச்சர் நிலக்கரி சுரங்கங்களிலிருந்தே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அனல் மின் நிலையங்களுக்கு இணைப்பின்படி பெரும்பான்மையான நிலக்கரி அளிக்கப்படவேண்டும்.

இவ்வாறு குறைவான அளவே இந்திய நிலக்கரி பெறப்படின், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அனல் மின் நிலையங்களை, கோடைக்கால அதிகபட்ச மின் தேவைக்கேற்ப முழுத்திறனுடன் இயக்குவது கடினமாகும்.

எனவே, மத்திய மின்சாரத்துறை அமைச்சர் இது தொடர்பாக மகாநதி நிலக்கரி நிறுவனத்திற்கு தகுந்த அறிவுரை வழங்கி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அனல் மின் நிலையங்களுக்கு தால்ச்சர் நிலக்கரி சுரங்கங்களிலிருந்து, இணைப்பின்படி 100 சதவீத நிலக்கரியை வழங்கிட ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தற்போது ரேணி நிலக்கரி நிறுவனத்திடமிருந்து 1.0 மில்லியன் டன்கள் நிலக்கரியைப் பெற புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது. இறக்குமதி நிலக்கரிக்கு மாற்றாக கொள்முதல் செய்யப்படும் இந்த நிலக்கரியானது மேட்டூர் அனல் மின் நிலையத்திற்கு முழுவதும் ரயில் மூலமே எடுத்துச் செல்லப்படுகிறது.

இறக்குமதி நிலக்கரிக்கு மாற்றாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு ஆண்டிற்கு 5.50 மில்லியன் டன்கள் இந்திய நிலக்கரி தேவைப்படுகிறது. ஆனால் கிழக்கு பிராந்திய நிலக்கரி நிறுவனத்திடமிருந்து ஆண்டிற்கு 2.50 மில்லியன் டன்கள் என்ற அளவிலேயே இந்திய நிலக்கரி நிறுவனத்தால் நிலக்கரி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிங்கரேணி நிலக்கரி நிறுவன சுரங்கங்கள், தமிழகத்திற்கு அருகே இருப்பதால், சிங்கரேணி நிலக்கரி நிறுவனத்தை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு ஆண்டிற்கு 3.0 மில்லியன் டன்கள் நிலக்கரி என்ற அளவிற்கு உயர்த்தி தர மத்திய மின்சாரத்துறை அமைச்சரை உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்'' என்று அமைச்சர் தங்கமணி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x