Published : 17 Jan 2014 09:30 AM
Last Updated : 17 Jan 2014 09:30 AM

தேசிய மின் தொகுப்பு இணைப்பால் மின்சார விலை பெருமளவு குறையும்: வெளி மாநில விற்பனையை அனுமதிக்க அரசுக்கு கோரிக்கை

தேசிய மின் தொகுப்புடன் தென்னிந்திய மின் தொகுப்பு இணைக்கப்பட்டுள்ள நிலையில், தென் மாநிலங்கள் குறைந்த விலைக்கு மின்சாரம் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மின் பற்றாக்குறை அல்லது அதிக மின் உற்பத்தியை சமாளிப்பதற்கும் வழிவகைகள் ஏற்பட்டுள்ளன.

கர்நாடகாவில் உள்ள ரெய்ச்

சூருக்கும், மகாராஷ்டிராவின் சோலாப்பூருக்கும் இடையே ரூ.815 கோடியில் 208 சர்க்யூட் கி.மீ. தூரத்தில் புதிய மின் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 200 முதல் 300 மெகாவாட் வரை மின்சாரம் கடத்தப்பட்டு, சோதனை நடந்து வருகிறது. வரும் மே மாதம் முதல் இந்தப் பாதை முழுமையான செயல்பாட்டுக்கு வரும் என்று தேசிய மின் தொடர் கழக (பவர் கிரிட் கார்ப்பரேஷன்) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இணைப்பால் என்ன பயன்?

கோடைகாலங்களில் மின்சார சந்தையில், தென்மண்டலங்களுக்கு மட்டும் மின்சார விலை யூனிட்டுக்கு 12 முதல் 20 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆனால், புதிய மின் தொகுப்பு இணைப்பால் வரும் காலங்களில் பல்வேறு வட மாநிலங்களும் தென் மாநிலங்களுக்கு மின்சாரத்தை வழங்க முடியும். இதனால், மின்சார சந்தையில் விலை பெருமளவு குறைய வாய்ப்புள்ளது.

இதுகுறித்து, பவர் கிரிட் கார்ப்பரேஷனின் தென் மண்டல செயல் இயக்குநர் என்.ரவிக்குமார் ’தி இந்து’விடம் கூறியதாவது:

தற்போது சோதனை ஓட்டத்தில் உள்ள தேசிய மின் தொகுப்பை இணைக்கும் முதல் பாதை, வரும் மே மாதத்துக்குப் பின், முழுமையான செயல்பாட்டுக்கு வரும். இந்த மின் தொடரின் மூலம் 2,000 மெகாவாட் மின்சாரம் கொண்டுவர முடியும். இரண்டாவது மின் தொகுப்பு, வரும் மார்ச்சில் பணிகள் முடிந்து, சோதனை ஓட்டத்துக்கு வரும். இரண்டு பாதைகளிலும் தலா 2,000 மெகாவாட் மின்சாரம் கடத்த முடியும்.

தென்னிந்திய மின் தொகுப்பு, மத்திய மின் தொகுப்புடன் இணைக்கப்பட்ட நிலையிலேயே, தற்போது மின்சாரத்தின் விலை யூனிட்டுக்கு ரூ.2.50 ஆக குறைந்துள்ளது. புதிய மின் திட்டங்கள் மூலம் தென் மாநிலங்களில் அதிக மின்சாரம் உற்பத்தியானால், அதை வட மாநிலங்களுக்கும் விற்க முடியும். தற்போது இரண்டு தனியார் நிறுவனங்கள் தென்னிந்தியாவில் இருந்து, வட மாநிலத்துக்கு மின்சாரம் விற்க பவர் கிரிட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளன. இவ்வாறு ரவிக்குமார் கூறினார்.

மின்சார விற்பனைக்கு தடை

தேசிய மின் தொகுப்பு இணைக்கப்பட்டதால், உபரியாகும் காற்றாலை மற்றும் அனல் மின்சாரத்தை வட மாநிலங்களுக்கு விற்க முடியும் என்றாலும் உபரி மின்சாரத்தை விற்க தமிழக அரசு தடை விதித்துள்ளதாக தனியார் மின்சார உற்பத்தியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து அகில இந்திய காற்றாலை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கஸ்தூரி ரங்கையன் கூறுகையில், ‘‘ஒரே நாடு, ஒரே மின் தொகுப்பு என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. தமிழகத்தைப் பொறுத்தவரை தனி மின் தொகுப்பாகத்தான் உள்ளது. ஏனெனில், தமிழகத்தில் இருந்து மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்கு யாரும் விற்கக் கூடாது என்று அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், அதிக அளவில் உற்பத்தியாகும் காற்றாலை மின்சாரம் பயன்படுத்தப்படாமல் வீணாகும் நிலை உள்ளது. தடை உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்று பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’’ என்றார்.

தென்னிந்திய மின் தொகுப்புடன் இணைக்கப்பட்டுள்ள தேசிய மின் தொகுப்பு, தற்போது 2.32 லட்சம் மெகாவாட் மின்சாரம் கடத்தும், உலகின் மிக நீளமான மின் தொகுப்பாகியுள்ளது. இந்த மின் தொகுப்புப் பாதை கர்நாடக மாநிலம் ரெய்ச்சூரிலிருந்து, தமிழகத்தில் தர்மபுரிக்கு ஏற்கெனவே இணைக்கப்பட்டுள்ளது.ஒரு லட்சம் கி.மீட்டர்

மின் தொகுப்பின் தற்போதைய மின் கடத்து திறன் 2.32 லட்சம் மெகாவாட். மின் தொகுப்புப் பாதை நீளம் 1.04 லட்சத்து 200 சர்க்யூட் கி.மீட்டர். துணை மின் நிலையங்கள் மொத்தம் 176.

ஐதராபாத் மற்றும் கொல்கத்தா, விஜயவாடா இடையே ஏற்கெனவே 400 கே.வி. மின் பாதை ஒன்று செயல்படுகிறது. இணைக்கப்பட்ட மின் தொகுப்பால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் சுமார் எட்டு சதவீத மின் தட்டுப்பாடுக்கு தீர்வு கிடைக்கும்.

இந்தியாவில் வடக்கு, கிழக்கு, மேற்கு, வட கிழக்கு மற்றும் தெற்கு என ஐந்து மண்டலங்களாக மின் தொகுப்புகள் இணைக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x