

வலை சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக இடிந்தகரை மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து, சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் மீதான தடை நீக்கப்பட்டது. நேற்று முதல் அவர்கள் ஆழ்கடலுக்கு சூறைமீன் பிடிக்கச் சென்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரை பகுதியில் மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது அங்கு விரித்து வைத்திருந்த வலைகளை சேதப்படுத்தியதாகவும், இதற்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும், இடிந்தகரையை சேர்ந்த கட்டுமரம் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் சின்னமுட்டம் மீன்வளத்துறை அதி காரிகளிடம் புகார் தெரிவித்தனர்.
கடலுக்கு செல்ல தடை
இதனால் இருதரப்பு மீனவர் கள் இடையே மோதல் போக்கு நில வியது. இப்பிரச்சினை தொடர் பாக சுமுக தீர்வு ஏற்படும் வரை சின்னமுட்டம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லக்கூடாது என்று மீன்வளத்துறை உதவி இயக்குநர் தீபா உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட நாட்டுப்படகு மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு விசைப்படகு மீனவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அவர்கள் வராததால் நேற்று முன்தினம் கடலுக்கு செல்ல விசைப்படகு மீனவர்களுக்கு தடை விதிக்கப் பட்டது. இதனால் சின்னமுட்டத்தை தங்குதளமாக கொண்டு மீன் பிடித்து வரும் 280-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நேற்று முன்தினம் கடலுக்குச் செல்லவில்லை.
இந்த நிலையில், இடிந்தகரை நாட்டுப்படகு மீனவர்களுடன் கன்னியாகுமரி விசைப்படகு சங்கங்களைச் சேர்ந்த செல்வம், ரெஜீஷ் உட்பட 7 மீன்பிடி சங்கத் தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். மீன்வளத்துறை உதவி இயக்குநர் தீபா, ஆய்வாளர் கள் விபின், தமிழ்மாறன் முன்னிலையில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில், ஏராளமான மீனவ பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
சேதமடைந்த இடிந்தகரை நாட்டுப்படகு மீனவர்களின் வலைகளுக்கு வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் உரிய இழப்பீடு வழங்குவதாகவும், கன்னியாகுமரி தெற்கு பகுதிக்குட்பட்ட ஆழ்கடலில் மட்டுமே மீன் பிடிப்பதாகவும் விசைப்படகு மீனவர்கள் உறுதி அளித்தனர்.
இதனால் பிரச்சினை முடிவுக்கு வந்ததையடுத்து, சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதி வழங்கினர். நேற்று சூறை மீன் பிடிப்பதற்காக அவர்கள் ஆழ்கடலுக்கு புறப்பட்டுச் சென்றனர்.