

கொளத்தூரில் உயர் அழுத்த மின் கம்பிகள் அடுத்த மழைக்காலத்துக்குள் புதை வடங்களாக மாற்றப்படும் என மின்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், கொளத்தூரைச் சேர்ந்த சந்திரா என்பவர் மின் விபத்தில் உயிரிழந்தது தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்தார். அப்போது அவர் பேசும்போது, “கொளத்தூரில் சந்திரா தவிர கீர்த்தனா எனும் 10 வயது சிறுமியும் உயிரிழந்துள்ளார். தடையில்லா மின்சாரம் தரும் வேளையில், மனித உயிர்களை பாதுகாக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
இதற்கு பதிலளித்து பேசிய மின்துறை அமைச்சர் பி.தங்கமணி, ‘‘வார்தா புயலால் அதிகளவு பாதிக்கப்பட்டது மின் வாரியம்தான். கொளத்தூர் தொகுதி பூம்புகார் பகுதியில் அதிக தாழ்வழுத்த மின் கம்பிகள் செல்கின்றன. இது எதிர்பாராத விதமாக அறுந்ததால், விபத்து ஏற்பட்டது. கொளத்தூர் மற்றும் விரிவுபடுத்தப்பட்ட மாநகராட்சி பகுதியில் மேல் நிலை கம்பிகளை அகற்றி, புதை வடமாக மாற்ற ரூ.2 ஆயிரத்து 567 கோடி மத்திய நிதி கிடைத்துள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்பட்டு வரும் மழை காலத்துக்குள் முடிக்கப்படும்’’ என்றார்.