Published : 22 Oct 2014 10:06 AM
Last Updated : 22 Oct 2014 10:06 AM

இழுத்தடிக்கப்படும் அர்ச்சகர் தேவநாதன் வழக்கு: போரட்டம் நடத்தப் போவதாக மகளிர் அமைப்புகள் அறிவிப்பு

காஞ்சிபுரம், மச்சேஸ்வரர் கோயில் கருவறையில் பெண்களுடன் தகாத முறையில் நடந்து கொண்டதாக அர்ச்சகர் தேவநாதன் மீது தொடரப்பட்ட வழக்கில், முதற்கட்ட விசாரணைக்கூட முறையாக மேற்கொள்ளப்படவில்லை என மகளிர் அமைப்புகள் அதிருப்தி தெரிவித்துள்ளன. இதைக் கண்டித்து மாவட்டம் முழுவதும் போராட்டம் நடத்தப் போவதாகவும் மகளிர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோயில் அர்ச்சகராக இருந்தவர் தேவநாதன். இவர், கோயில் கருவறையில் பல பெண்களுடன் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. அதை அவரே செல்போனில் படம் பிடித்ததாகவும் கூறப்பட்டது. இந்த ஆபாச வீடியோ காட்சிகள் கடந்த 2009-ம் ஆண்டு ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

இதையடுத்து சிவகாஞ்சி போலீஸார், அர்ச்சகர் தேவநாதன் மீது வழக்குப் பதிவு செய்தனர். அவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இந்த வழக்கின் விசாரணை மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. எனினும், 90 நாட்களுக் குள் போலீஸார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாததால், தேவநாதன் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்.

இவ்வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போன், லேப்-டாப் பரிசோதனை முடிவுகள் வராததால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். பின்னர் இந்த வழக்கு காஞ்சிபுரம் டவுன் போலீஸ் டி.எஸ்.பி.க்கு மாற்றப்பட்டது. அவர், காஞ்சிபுரம் ஜே.எம்.2-ம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.

தேவநாதன் மீது, பொது இடங்களில் ஆபாசமாக நடந்து கொள்ளுதல், இந்து மக்களின் மனதை புண்படுத்துதல், மிரட்டல், பலாத்காரம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட 4 பெண்கள் உட்பட 35 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கு செங்கல்பட்டில் உள்ள மாவட்ட மகிளா நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கு குறித்து, இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் காஞ்சி புரம் மாவட்ட செயலாளர் பிரமீளா எட்வா உள்ளிட்ட மகளிர் சங்க நிர்வாகிகள் தெரிவித்ததாவது:

‘பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளின் விசாரணையை 6 மாத காலத்துக்குள் முடிக்க வேண்டும் என நிர்பயா வழக்கில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தமிழகத் தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. தேவநாதன் வழக்கில் வலுவான சாட்சிகள், ஆதாரங்கள் உள்ளன. எனினும், வழக்கு பதிவாகி 5 ஆண்டுகள் கடந்தும் சாட்சி விசாரணை தொடங்கவில்லை.

அரசு வழக்கறிஞர் சரியில்லை என்றால் அவரை மாற்ற வேண்டியது தானே? வழக்கு நடைபெறும் செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் சாட்சிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் தேவநாதனின் வழக்கறிஞர் தரப்பில் முன்வைக்கப்பட்ட வலுவற்ற காரணங்களுக்கு, இந்த வழக்கை நடத்தும் அரசு வழக்கறிஞர் தரப்பிலிருந்து ஏனோ எதிர்வாதமே வைக்கப்படவில்லை.

இதனால் அக்டோபர் 17-ம் தேதி முதன்மை சாட்சிகள் சென்னையில் இருந்து 3-ம் முறையாக வந்திருந்தும், அவர்கள் விசாரிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டனர். பெண்களை போகப் பொருளாக, அதுவும் கருவறைக் குள்ளேயே மிரட்டிப் பயன்படுத்திய அர்ச்சகர் தேவநாதனுக்கு எதிரான இந்த வழக்கை, பெண்களின் பாதுகாப்புக் காகவே அமைக்கப்பட்ட மகிளா நீதிமன்றம் விரைந்து நடத்தி உரிய தண்டனை தர வேண்டாமா?

ஆர்ப்பாட்டம் நடத்த திட்டம்

இதில், உயர் நீதிமன்றமாவது தலையிட்டு இதுபோன்ற வழக்குகளின் விசாரணையை 6 மாத காலத்துக்குள் முடிக்க ஆணையிட வேண்டும். தேவநாதன் வழக்கு விசாரணையை விரைவாக நடத்த வலியுறுத்தி, காஞ்சி புரம் மாவட்டம் முழுவதும் பெண்கள் அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்த உள்ளோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x