

பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றக்கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி டி.எச்.வஹேலா முன்னிலையில் இன்று நடைபெறவுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா பெங்களூரை அடுத்துள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், கர்நாடக அரசுக்கும், கன்னட மக்களுக்கும் எதிராக அதிமுக ஆதரவாளர்கள் பேனர், போஸ்டர் ஒட்டியதால் கர்நாடக அரசியல் கட்சித் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனவே, ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என முன்னாள் பிரதமர் தேவகவுடாவும், சில கர்நாடக அமைச்சர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சத்யநாராயணா, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில்,'' ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹாவுக்கு தீர்ப்பளிக்கும் அதிகாரம் இல்லை. வழக்கை விசாரிக்க மட்டுமே அதிகாரம் இருக்கிறது. தண்டனை வழங்கும் அதிகாரத்தை அவருக்கு உச்சநீதிமன்றம் அளிக்கவில்லை.
அதே போல ஜெயலலிதா கர்நாடகத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால் தேவையற்ற அரசியல் பிரச்சினை எழுகிறது. கர்நாடகத்துக்கும், தமிழகத்துக்கும் இடையே உள்ள சுமுக உறவும், நல்லிணக்கமும் பாதிக்கப்படுகிறது. இதனால் இரு மாநிலங்களிலும் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே ஜெயலலிதாவை உடனடியாக தமிழக சிறைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது. இந்த மனு கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எச்.வஹேலா முன்னிலையில் இன்று 26-வது வழக்காக விசாரணைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரைத்துறையினர் மீது கர்நாடகத்தில் வழக்கு?
இதனிடையே சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்தும்,நீதிபதி டி'குன்ஹாவை விமர்சித்தும் போராட்டங்கள் நடத்தியவர்கள் மீது கர்நாடக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என பெங்களூரை சேர்ந்த வழக்கறிஞர் தர்மபால் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக வழக்கறிஞர் தர்மபால் கூறும்போது: பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கண்டித்து தமிழகத்தில் பல இடங்களில் போராட்டங்கள் நடந்துள்ளன.வேலூர் மாநகராட்சி நிர்வாகம் உட்பட பல்வேறு அமைப்புகள் தீர்மானங்கள் நிறைவேற்றின.அதிமுகவினர் மட்டுமில்லாமல் தமிழ் திரைத்துறையினரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.அங்கு நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்துகள் பதாகைகளாக வைக்கப்பட்டிருந்தன.
இத்தகைய செயல்கள் நீதிமன்றத்துக்கும்,நீதிபதிக்கும் எதிரானவை.இவை அனைத்தும் ஊடகங்களில் வெளியாகி இருக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடுக்குமாறு கர்நாடக மாநில அட்வகேட் ஜெனரல் ரவிவர்ம குமாரிடம் மனு அளித்துள்ளேன்''என்றார்.