Last Updated : 17 Mar, 2017 11:00 AM

 

Published : 17 Mar 2017 11:00 AM
Last Updated : 17 Mar 2017 11:00 AM

அனைத்து வசதிகளும் கொண்ட தஞ்சையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்க வேண்டும்: காலம் தாழ்த்தாமல் அறிவிக்க அண்டை மாவட்ட மக்கள் வலியுறுத்தல்

தமிழகத்துக்கான சர்வதேசத் தரம் வாய்ந்த எய்ம்ஸ் மருத்துவமனையை, தமிழக முதல்வரின் பரிந்துரைப்படி, மாநிலத்தின் மையப் பகுதியான, அனைத்து வசதிகளும் கொண்ட தஞ்சாவூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்கிப்பட்டியில் அமைக்க வேண்டும் என மத்திய மண்டலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் வலியுறுத்துகின்றனர்.

தமிழகத்தின் மையப் பகுதியான, இரட்டை நகரங்கள் எனப்படும் திருச்சி அல்லது தஞ்சாவூரில், ஏழை, நடுத்தர மக்கள் குறைந்த செலவில் உயர் சிகிச்சை பெற வசதியாக, உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்றை தனியாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள புகழ்பெற்ற எய்ம்ஸ் (அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம்) மருத்துவமனையில் கிடைக்கும் அனைத்து உயர் சிறப்பு சிகிச்சை வசதிகளும், நாட்டின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் கிடைக்கும் வகையில், மாநிலத்துக்கு ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

அதன்படி, தமிழகத்தில் சுமார் ரூ.2 ஆயிரம் கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்காக, மதுரை தோப்பூர், ஈரோடு பெருந்துறை, தஞ்சாவூர் செங்கிப்பட்டி, காஞ்சிபுரம் செங்கல்பட்டு, புதுக்கோட்டை பால்பண்ணை ஆகிய 5 இடங்களில் ஒன்றை தேர்வு செய்யுமாறு தமிழக அரசு, மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது.

இந்த இடங்களை மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் தாத்ரி பாண்டா தலைமையிலான குழு, 2015, ஏப்ரலில் ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை அளித்து 23 மாதங்களாகியும் மத்திய அரசால் இடம் தேர்வு செய்யப்படவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. ஆனால், மற்ற மாநிலங்களில் இடம் தேர்வு செய்யப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டன.

போராட்டக் குழு அமைப்பு

இதையடுத்து, அனைத்து அம்சங்களையும் கொண்ட செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவ மனையை அமைக்க வேண்டும் எனக் கோரி, ‘செங்கிப்பட்டி எய்ம்ஸ் மருத்துவமனைக்கான போராட்டக் குழு’ தஞ்சாவூரில் கடந்த 2016, ஜனவரியில் தொடங்கப்பட்டு, பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டதுடன், அனைத்துக் கட்சித் தலைவர்கள், தமிழக முதல்வர், பிரதமர் ஆகியோருக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டன.

இந்நிலையில், அண்மையில் டெல்லி சென்று பிரதமர் மோடியைச் சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்துக்கான எய்ம்ஸ் மருத்துவமனையை, தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

முதல்வர், பிரதமருக்கு நன்றி

இதற்கு, போராட்டக் குழு சார்பில், முதல்வர், பிரதமருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதோடு, முதல்வரின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு உடனடியாக அறிவிப்பு வெளியிட்டு, பணிகளைத் தொடங்க வேண்டும் என போராட்டக் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அமைதியான இயற்கைச் சூழல்

இதுகுறித்து, போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் துரை.மதிவாணன், வி.விடுதலைவேந்தன் ஆகியோர் தெரிவித்தது: தமிழ்நாட்டில் மற்ற இடங்களைக் காட்டிலும் செங்கிப்பட்டியில் எவ்வித சட்டச் சிக்கலும் இல்லாத அரசின் சுமார் 206 ஏக்கர் நிலம், நோயாளிகள், மருத்துவ மாணவர்கள், மருத்துவ ஆராய்ச்சிக்குத் தேவையான அமைதியான இயற்கைச் சூழல், தண்ணீர், மின்சார, சாலை வசதிகள், 2 கி.மீ. தொலைவில் திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலை, 10 கி.மீ. தொலைவில் தஞ்சை- மதுரை தேசிய நெடுஞ்சாலை, 20 கி.மீ. தொலைவில் திருச்சி- சென்னை, திருச்சி- மதுரை, திருச்சி- திண்டுக்கல், திருச்சி- கோவை தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன.

அதேபோல, 25 கி.மீ. தொலைவில் திருச்சி சர்வதேச விமான நிலையம், 15 கி.மீ. தொலைவில் தஞ்சை விமானப்படை நிலையம், தஞ்சை, திருச்சி ரயில் நிலையங்கள், மத்திய பேருந்து நிலையங்கள் என 24 மணி நேர பயண வசதி, தமிழ்நாட்டின் மையப் பகுதி, இயற்கைப் பேரிடர் பாதிக்காத பாதுகாப்பான இடம் என அனைத்து அம்சங்களும் கொண்ட செங்கிப்பட்டியில் அமைப்பதே சிறப்பாக இருக்கும்.

இதனால், விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள காவிரி டெல்டா மக்களுக்கு உரிய சிகிச்சையும், உயர் மருத்துவப் படிப்புகளும், வேலைவாய்ப்பு களும், புதிய தொழில் வாய்ப்பு களும் கிடைக்கும். மாநிலத்தின் மத்தியில் உள்ள தால், மற்ற பகுதி மக்களும் எளிதில் வந்து சிகிச்சை பெற முடியும். அதனால், இனியும் காலம் தாழ்த்தாமல், உடனடியாக அறிவிப்பு வெளியிட்டு, பணிகளைத் தொடங்க வேண்டும்” என்றனர்.

தஞ்சைதான் உகந்த ஊர்

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்னாள் கண்காணிப்பாளரும் மூளை நரம்பியல் நிபுணருமான டாக்டர் ஆர்.இளங்கோவன் கூறியபோது, “டெல்லியில் உள்ளது போலவே மாநிலங்களில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைகளும் தன்னாட்சி பெற்றதாக இருக்கும். இங்கு இலவசமாகவும், குறைந்த செலவிலும் உயர் சிகிச்சைகள் கிடைக்கும். உலகத் தரத்திலான சிகிச்சை, மருத்துவ ஆராய்ச்சிகள், மருத்துவப் படிப்புகள் இங்கு நடைபெறும். தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு இது ஒரு எடுத்துக் காட்டாகவும், தரமதிப்பீட்டுக் குறியீடாகவும் இருக்கும். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, தமிழகத்தில் மற்ற இடங்களைக் காட்டிலும் செங்கிப்பட்டி பொருத்தமானதாக இருக்கும்” என்றார்.

எம்ஜிஆரின் விருப்பம்

போராட்டக் குழுத் தலைவர் அய்யனாபுரம் சி.முருகேசன் கூறியபோது, “முதல்வராக இருந்த எம்ஜிஆர், தென் மாவட்டங்கள் உள்ளிட்ட தொலை தூர பகுதி மக்கள் சென்னைக்கு வருவதைத் தவிர்க்கவும், சென்னையில் மக்கள் பெருக்கத்தை தவிர்க்கவும், இரட்டை நகரங்களான திருச்சி- தஞ்சாவூர் இடையே தமிழ்நாட்டின் தலைநகரை அமைக்க முயற்சி மேற்கொண்டார். இப்போது, அந்தப் பகுதியில்தான் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வலியுறுத்துகிறோம். மற்ற இடங்களைக் காட்டிலும் செங்கிப்பட்டியே சிறப்பானதாக இருக்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x