

காவிரி ஆற்றுப் படுகையில் ஷேல் காஸ் எடுப்பது தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தர விட்டுள்ளது.
காவிரி ஆற்றுப் படுகையில் ஓஎன்ஜிசி மேற்கொண்டு வரும் ஷேல் காஸ் எடுக்கும் ஆரம்பக் கட்ட பணிகளுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று கோரி திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்ட காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், காவிரி பாசன குத்தகை விவசாயிகள் சங்கத் தலைவர் ஆர்.முருகன் ஆகியோர் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர்வில் தனித்தனியே மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி பி.ஜோதி மணி, தொழில்நுட்ப உறுப்பினர் பி.எஸ்.ராவ் ஆகியோர் முன்னி லையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் பி.ஆர்.பாண்டியன் தரப்பில் வழக்கறிஞர்கள் சிவ.ராஜசேகரன், வி.ஜெ.அருள்ராஜ், மற்றொரு மனுதாரர் ஆர்.முருகன் தரப்பில் மதிமுக பொதுச்செயலர் வைகோ ஆகியோர் ஆஜராயினர்.
ஓஎன்ஜிசி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மாசிலாமணி, “ஷேல் காஸ் பணியை தொடங்குவதற்காக, சுற்றுச்சூழல் அனுமதி கோரிய கருத்துரு, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்ச கத்தில் நிலுவையில் உள்ளது. இன்னும் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படவில்லை. அதனால் காவிரி ஆற்றுப் படுகையில் எந்த பணிகளையும் தொடங்கவில்லை. இந்நிலையில், ஷேல் காஸ் எடுக்கும் திட்டத்துக்கு தடை விதிக்ககோரி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை பசுமை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட வைகோ, “மீத்தேன் வாயு எடுக்கும் நடைமுறையை விட, ஷேல் காஸ் எடுக்கும் நடைமுறை மிகவும் அபாயகரமானது. 634 வேதிப்பொருட்களை நீரில் கலந்து, பல ஆயிரம் மீட்டர் ஆழத்தில் பாறைகளுக்கிடையில் நீரழுத்த முறிவை ஏற்படுத்தி, அதில் இருந்து ஷேல் காஸ் எடுக்கப்படும். இதனால் பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும். வேளாண்மை பாதிக்கும். மீத்தேன் விவகாரத்தில், தமிழக அரசு நிபுணர்கள் குழு அமைத்து, அவர்களின் அறிக்கை அடிப்படையில், தமிழகத்தில் மீத்தேன் எடுக்க அனுமதி இல்லை என்று அறிவித்தது. அதே போன்று ஷேல் காஸ் எடுக்கும் விவகாரத்திலும், தமிழக அரசு நிபுணர் குழு அமைத்து, அவற்றின் அறிக்கை அடிப்படையில் உரிய முடிவெடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டை தீர்ப்பாயம் கேட்க வேண்டும். இப்பணி இதுவரை தொடங்கப்படாவிட்டாலும், முன் னெச்சரிக்கையாகவே, அத்திட் டத்தை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என வலியுறுத்துகிறோம்” என்று வாதிட்டார்.
அதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பிய அமர்வின் உறுப்பினர்கள், “தமிழகத்தில் ஷேல் காஸ் எடுக்கும் திட்டம் தொடர்பாக அரசு தலைமைச் செயலர் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் ஆகியோர், 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
மனு மீதான விசாரணை அக்டோபர் 28-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.