Published : 13 Jun 2016 10:08 AM
Last Updated : 13 Jun 2016 10:08 AM

மறைந்துவரும் மதுரையின் அடையாளமான வைகை நதி: கருத்தரங்கில் சமூக ஆர்வலர்கள் ஆதங்கம்

மதுரையின் அடையாளமான வைகை நதியை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படாததால் நாள்தோறும் சிறிதுசிறிதாக மறைந்து வருவதாக நீர் மேலாண்மை கருத்தரங்கில் சமூக ஆர்வலர்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர்.

நவீன நீர்வழிச்சாலை பேரியக்கம் சார்பில் நீர்மேலாண்மை பற்றிய கருத்தரங்கம் மதுரையில் நடை பெற்றது. மதுரை மாவட்டத் தலைவர் ஆர்.முருகப்பன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பேராசிரியர் கே.காசிம் மதுரையின் நீர்வளத்தை மேம்படுத்த அனைத்து கண்மாய்களையும் தூர்வாருவதன் அவசியம் என்றும், அதற்காக ஒரு செயலாக்க குழு எற்படுத்தி அதில் மதுரையின் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்களை இடம்பெறச் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

ஓய்வுபெற்ற ஐஆர்எஸ் அதிகாரி மோகன்காந்தி பேசுகையில், மதுரையின் அடையாளம் வைகை நதியை சீர்படுத்தி ஆண்டுமுழுவதும் தண்ணீர் ஓடும்படியாக செய்ய வேண்டும் என்றார்.

பொறியாளர் ஏ.சி.காமராஜ் பேசியது:

வைகையில் இயற்கை நீரோ ட்டத்தை தடுத்து நீரை தேக்கக் கூடாது. வெள்ள நீரை மட்டுமே தேக்க வேண்டும் என அரசாணை உள்ளது. எனவே அரசாணையை மதித்து நீரோட்டத்தை அனுமதித்தாலே வைகை நதி பாதி சீராகிவிடும். அதனை வலியுறுத்தி பொதுப்பணித் துறைக்கு கடிதம் அளித்துள்ளோம். தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சினைக்கு நவீன நீர்வழிச்சாலை ஒன்றே நிரந்தர தீர்வு என்றார்.

வண்டியூர் கண்மாய் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராகவன், வண்டியூர் பூங்கா நடையாளர் கழகத் தலைவர் ராஜ்குமார் ஆகியோர் வண்டியூர் கண்மாயை ஆழப்படுத்தி ஆண்டு முழுவதும் நீரை தேக்கி சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.

அதுபோல் செல்லூர் கண்மாய் பாதுகாப்புக் குழு தலைவர் திலகர் செல்லூர் கண்மாயை தூர்வாரி ஆழப்படுத்துவதன் மூலம் செல்லூர் பகுதி மக்களின் நீர் ஆதாரம் மேம்படும். தற்போது 1000 அடிக்கு கீழ் சென்றுள்ள நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்றார்.

இதில் நவீன நீர்வழிச்சாலை பேரியக்க துணைத் தலைவர் பண்ருட்டி கே.வி.ஆர்.ஜெயபால், முன்னாள் துணை ஆட்சியர் கா.கருப்பையா, திண்டுக்கல் மாவட்டத்தலைவர் டி.பி.ஆர்.போஸ், செயற்குழு உறுப்பினர் வடிவேலு, புறநகர் மாவட்டச் செயலர் முருகேசன், மதுரை பொறியாளர்கள் கூட்டமைப்பின் (IEI) தலைவர் நாகலிங்கம், முன்னாள் வேளாண் இணை இயக்குநர் ராஜகுரு. வண்டியூர் கண்மாய் கூட்டமைப்பு செயலர் ஆர்.பாண்டி, விடியல் மாணவர் கூட்டமைப்பு, விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x