

பொங்கல் திருநாளையொட்டி இந்த ஆண்டிற்கான விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ''தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புதன்கிழமை தலைமைச் செயலகத்தில், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் கீழ், 2017-ஆம் ஆண்டு 486 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவில் 1,62,42,717 சேலைகள் மற்றும் 1,62,24,223 வேட்டிகள் வழங்கிடும் அடையாளமாக, 7 குடும்பங்களுக்கு விலையில்லா வேட்டி சேலைகளை வழங்கினார்.
விவசாயத்தை அடுத்து கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத் தொழிலாக நெசவுத் தொழில் விளங்கி வருகிறது. கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு அளிக்கவும், அதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடவும், 1983-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
இதன்படி ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளையொட்டி விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல், கைத்தறி, விசைத்தறி தொழில்களில் ஈடுபட்டுள்ளோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.
விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் மூலம் தரமான வேட்டி, சேலைகளை வழங்கிடும் நோக்கில், 2014-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை முதல் பாலிகாட் சேலைகளை வழங்கிட அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டார்.
அதன்படி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி செயல்படும் தமிழக அரசு, 2017-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ், 1 கோடியே 62 லட்சத்து 42 ஆயிரத்து 717 சேலைகளும், 1 கோடியே 62 லட்சத்து 24 ஆயிரத்து 223 வேட்டிகளும் பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளன. இத்திட்டத்திற்கென தமிழக அரசு 486 கோடியே 36 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது'' என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.