

கோவை மாவட்டத்தில் ஆனைகட்டி, முள்ளி, வாளையாறு, வேலந்தாவளம், நடுப்புணி, கோவிந்தாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கேரள மாநில எல்லைப் பகுதிகள் தொடங்குகின்றன.
இவற்றில் ஆனைகட்டி, வாளையாறு, வேலந்தாவளம், முள்ளி பகுதிகளில், மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் புலி, சிறுத்தை, கரடி, யானை, காட்டெருமை, செந்நாய், நரி, குரங்கு என பல்வேறு வன விலங்குகள் சுற்றித்திரிகின்றன.
வறட்சி காரணமாக தண்ணீர் மற்றும் போதுமான உணவின்றித் தவிக்கின்றன காட்டு யானைகள். இதனால் அவை ஊருக்குள்ளும், விவசாயத் தோட்டங்களிலும் புகுந்து விடுவதால், மனித-யானை மோதல்கள் அதிகரித்து வருகின்றன.
யானைகள் தாக்கி மனிதர்கள் இறப்பதைக் காட்டிலும், மின் வேலியில் சிக்கியும், அகழியில் விழுந்தும், ரயில்களில் அடிபட்டும், நோய்வாய்ப்பட்டும், வன விலங்கு வேட்டையர்களால் சுடப்பட்டும் யானைகள் இறப்பது அதிகம்.
குறிப்பாக, வாளையாறு-மதுக்கரை பகுதிகளில் யானைகள் ரயிலில் சிக்குவது அதிகமாக உள்ளது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் கேரள வாளையாறு வனப் பகுதியில் குட்டியானையும், அதைக் காப்பாற்றச் சென்ற தாய் யானையும் ரயிலில் சிக்கி இறந்தன. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த யானை உள்பட 3 யானைகள் மதுக்கரை அருகே ரயிலில் அடிபட்டு இறந்தன. கேரள வாளையாறு பகுதியில் அடுத் தடுத்து 2 யானைகள் இறந்தன.
இதையடுத்து, வாளையாறு, மதுக்கரை வனப் பகுதியில் செல்லும் ரயில் பாதையை யானைகள் கடப்ப தாக், 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்திலேயே ரயிலை இயக்க வேண்டும்; தொடர்ந்து ஒலி எழுப்பியபடியே ரயில்களை இயக்க வேண்டும் என்றெல்லாம் விதிமுறைகள் வகுக்கப்பட்டன.
எனினும், ரயில் ஓட்டுநர்கள் இவற்றைக் கடைப்பிடிக்கவில்லை என்று வன உயிரின ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, உரிய விதிகளின்படி வேகக்கட்டுப் பாடு பின்பற்றப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.
இந்த சூழ்நிலையில், மீண்டும் இந்தப் பகுதியில் ரயிலில் யானைகள் சிக்கி அடிபடுவது தொடர்ந்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் மதுக்கரை எட்டிமடை அருகே ரயிலில் அடிபட்டு பெண் யானை இறந்தது. பின்னர், வாளையாறு ரயில் நிலையம் அருகே ஆண் யானை ரயிலில் அடிபட்டு இறந்தது. மீண்டும் யானைகள் இறந்ததால், “இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதற்கு அதிவிரைவு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டதே காரணம்” என்று இயற்கை ஆர்வலர்கள் பகிரங்கமாக குற்றம் சுமத்தினர்.
மேலும், “வனத் துறையில் போது மான பணியாளர்கள் இல்லை. விளை நிலங்களில் புகும் யானைகளை விவசாயிகள் பட்டாசு வெடித்து விரட்டி விடும்போது, அவற்றை காட்டுக்குள் விரட்டியடிக் கும் பணியில் வனத் துறையினர் ஈடுபடுவதில்லை. இதனால் ரயில் பாதைக்கு வரும் யானைகள், விபத்தில் சிக்குகின்றன” என்றும் புகார்கள் தெரிவிக்கப்பட்டன.
இதையடுத்து, ரயில்வே நிர்வாகம் மற்றும் இரு மாநில வனத் துறை அதிகாரிகள் கலந்தாலோ சனை நடத்தி, பல்வேறு நடவடிக் கைகளை மேற்கொண்டனர். இதனால், கடந்த ஓராண்டாக அந்தப் பகுதியில் ரயில் பாதையில் விபத்து எதுவும் நிகழவில்லை என்று வாளையாறு வனத் துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த சிறப்பு பணியில் 6 வேட்டைத் தடுப்பு காவலர்கள் ஓராண்டாக ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.
இதுகுறித்து வனத் துறையினர் ‘தி இந்து’விடம் கூறியதாவது: கடந்த ஆண்டு அடுத்தடுத்து 2 யானைகள் இறந்தபோதே, இரண்டு மாநில வனத் துறையினர் கலந்துபேசி, ரயிலில் வன விலங்குகள் சிக்கி இறப்பதைத் தடுக்க என்னவெல்லாம் செய்யலாம் என்று ஆலோசித்தனர்.
வாளையாறிலிருந்து மதுக்கரை வரை சுமார் 22 கிலோமீட்டர் தொலைவுக்குள்தான், ரயில்களில் யானைகள் சிக்கும் அபாயம் இருப் பதால், அங்கு சிறப்பு கண்காணிப்புப் பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
இரவு நேரங்களில் குறிப்பிட்ட ரயில் பாதையில் யானைகள் நகர்வு முழுமையாக கண்காணிக்கப்பட்டு, ரயில் பாதையை நோக்கி யானைகள் வந்தால், அவற்றை காட்டுக்குள்ளேயே விரட்டும் பணியில் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் ஈடுபட்டனர்.
இதற்காக, கேரள வனத் துறை சார்பில், வாளையாறு பகுதியில் மட்டும் 6 வேட்டைத் தடுப்புக் காவலர்கள் (வாட்ச்சர்) நியமிக்கப்பட்டனர்.
கேரள வனத் துறையில் சமூக நலக் காடுகள், மரக் கிடங்கு என பல்வேறு பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள வாட்ச்சர்கள் வெவ்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் 6 பேரைத் தேர்ந்தெடுத்து, தினமும் பகலில் 2 பேர், இரவில் 2 பேர், அடுத்த நாள் மீண்டும் பகலில் 2 பேர் என ரயில்வே பகுதி காடுகளில் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
ரயில் பாதையை நோக்கி யானைகள் வந்தால், அவற்றை மீண்டும் காடுகளுக்குள் விரட்டிவிடும் பணியை மட்டுமே அவர்கள் மேற்கொள்கின்றனர். அதேசமயம், 40 கிலோமீட்டர் வேகத்துக்குள் ரயில்களும் இயக்கப்படுகின்றன என்றனர்.
குறைந்த சம்பளம்; அதிக வேலை…
வாளையாறு வனப் பகுதியில் வெவ்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் வேட்டைத்தடுப்புக் காவலர்கள் கூறும்போது, “எங்களுக்கு ரூ.5, ரூ.6 ஆயிரம் மட்டுமே சம்பளம், எனினும், இரவு-பகல் பாராமல் பணியாற்றி வருகிறோம். அடர்ந்த வனப் பகுதிக்கு வரும், பெரிய அதிகாரிகள் முதல் சின்ன அலுவலர்கள் வரை நாங்களே அழைத்துச் சென்று, வழிகாட்டுகிறோம். வன விலங்குகளிடமிருந்து பாதுகாப்பும் அளிக்கிறோம். விலங்குகள் ஊருக்குள் நுழையவிடாமல் தடுக்கிறோம். ஆனால், எங்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. பணி நேரமும் நிர்ணயிக்கப்படவில்லை. மேலும், கடந்த 2 மாதங்களாக சம்பளமும் வரவில்லை.
வனத் துறையின் ஒவ்வொரு பிரிவிலும் பணியாற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கான வருடாந்திர மொத்த செலவு உள்ளிட்ட விவரங்களை அந்தந்தப் பிரிவு வனச் சரக அலுவலர்கள் கணக்கிட்டு, உயர் அதிதாரிகளுக்கு கடிதம் அனுப்புவர். அதை அவர்கள் அரசுக்கு அனுப்பிவைப்பவர். அரசு அனுமதித்த உடன், வேட்டைத் தடுப்புக் காவலர்களுக்கு சம்பளம் கிடைக்கும். இவ்வாறு கணக்கிட்டு, அனுமதி பெற்று சம்பளம் வருவதற்குள், 2 முதல் 3 மாதங்களாகிவிடும். அதுவரை சம்பளம் இல்லாமல் வேலை செய்ய வேண்டியிருக்கும். இனியாவது எங்கள் வேதனையைப் போக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.