

2017-2018 பட்ஜெட்டில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்திற்காக 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட் 2017 - 2018, சட்டப்பேரவையில் இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது.
நிதிநிலை அறிக்கையை வாசித்த அமைச்சர் ஜெயக்குமார், "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தை தமிழ்நாடு அரசு சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. மாநிலத்தின் இத்திட்டச் செயலாக்கம் குறித்து மத்திய அரசு வெகுவாகப் பாராட்டியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பண்ணைக் குட்டைகள் அமைத்தல், கழிவறைகள் கட்டுதல், மரம் நடுதல், கோழி மற்றும் கால்நடைகள் வளர்ப்புக் கொட்டகைகள் அமைத்தல் போன்ற புதுமையான பணிகளைத் தழுவி, தற்போது தேசிய அளவில் இவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது நிலவி வரும் வறட்சியைக் கருத்தில் கொண்டு, இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் வேலை நாட்களின் எண்ணிக்கை நூறிலிருந்து நூற்று ஐம்பதாக உயர்த்தப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல், தொழிலாளர் கூலிக்கான தொகை முழுவதையும் இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு வங்கி மூலம் மத்திய அரசே நேரடியாக விடுவித்து வருகிறது.
பொருட்களுக்கான செலவில் மத்திய அரசு அதன் பங்கான 75 சதவீதத்தை, மாநில வரவு-செலவுத் திட்டத்தின் வழியாக விடுவித்து வருகிறது.
இதனால், மாநில அரசின் வரவு-செலவுத் திட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்படும் தொகை பெருமளவில் குறைந்துள்ளது.
2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்திற்காக 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.