வாகனத்தை பழுதுபார்த்த தொகையை வழங்காததால் வாடிக்கையாளருக்கு ரூ.10,000 இழப்பீடு வழங்க வேண்டும்: காப்பீட்டு நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவு

வாகனத்தை பழுதுபார்த்த தொகையை வழங்காததால் வாடிக்கையாளருக்கு ரூ.10,000 இழப்பீடு வழங்க வேண்டும்: காப்பீட்டு நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

விபத்து குறித்து உரிய காலத்தில் தகவல் தெரிவித்தும் பழுதுபார்ப்பு தொகையை வழங்காத காப்பீட்டு நிறுவனம், வாடிக்கையாளருக்கு பழுதுபார்ப்பு தொகையுடன் ரூ.10,000 இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த என்.சந்திரசேகர் சென்னை மாவட்ட (தெற்கு) நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

எனது இரு சக்கர வாகனத்துக்கு நுங்கம்பாக்கத்தில் இயங்கி வரும் ஒரு தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் காப்பீடு செய்திருந் தேன்.

இந்நிலையில், கடந்த 2010 மே 2-ம் தேதி ஏற்பட்ட விபத்தில் எனது வாகனம் சேதமடைந்தது. இதுகுறித்து அன்றைய தினமே நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அதோடு, காப்பீட்டு நிறுவனத்துக்கும் விபத்து குறித்து தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தேன்.

பின்னர், தொடர்புடைய காப்பீட்டு நிறுவனத்தின் மதிப்பீட் டாளர் வாகனத்தை ஆய்வு செய்தார். இருப்பினும், சேதத்துக்கு உரிய இழப்பீட்டு தொகையை வழங்குவதற்கு பதில், எனக்கு காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து கடிதம் அனுப்பினர். அதில், விபத்து தொடர்பாக தகவல் தெரிவிக்க 60 நாட்கள் ஆனதால் இழப்பீட்டு கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், உரிய காலத்தில் நான் தகவல் தெரிவித்துவிட்டதால் எனது வாகன சேதத்தை சரிசெய்ய ஏற்பட்ட தொகையான ரூ.14,573-ஐ அளிக்கவும், எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.25,000 வழங்கவும் காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை மாவட்ட (தெற்கு) நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் தலைவர் எம்.மோனி, உறுப்பினர்கள் கே.அமலா, டி.பால் சேகரன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

விபத்தால் ஏற்பட்ட சேத மதிப்பை ஆய்வு செய்ய தனியார் காப்பீட்டு நிறுவனம், மதிப்பீட்டாளரை அனுப்பியுள்ளது. இருப்பினும், விபத்து தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை கருத்தில் கொள்ளாமல் மனுதாரர் தாமதமாக தகவல் தெரிவித்தார் என்று கூறி இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனம் மறுத்துள்ளது. இதனால், மனுதாரருக்கு மன உளைச்சல் ஏற்படுத்துள்ளது.

எனவே, வாகன பழுதுபார்ப்பு செலவான ரூ.14,573-ஐ 9 சதவீத வட்டியுடன் காப்பீட்டு நிறுவனம் அளிக்க வேண்டும். மேலும், மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.10,000, வழக்கு செலவாக ரூ.5,000-த்தையும் மனுதாரருக்கு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் உத்தர விட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in