

அனுமதியின்றி தனியார் சார்பில் வணிக நோக்கில் தண்ணீர் விற்பனை நடைபெறுவது குறித்து, திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆட்சியர் ச.ஜெயந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: பருவமழை பொய்த்ததால், திருப்பூர் மாவட்டத்தில் வறட்சி ஏற்பட்டு குடிநீர் ஆதாரங்களில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.
அனைத்துப் பகுதிகளிலும் தனியாருக்குச் சொந்தமான கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் குடிநீரை வணிக நோக்கில் பயன்படுத்துவதை தடுக்க, கோட்ட அளவிலான உதவி ஆட்சியர்கள், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, வணிக நோக்குடன் தண்ணீரை விற்பனை செய்ய வேண்டாம்.
இதுகுறித்து தெரியவந்தால், மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊரக வளர்ச்சி பிரிவு, கண்காணிப்பு அறை தொடர்பு எண் 18004257023-க்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.
தட்டுப்பாட்டை போக்க சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்த வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.