ரூ.570 கோடி விவகாரம்: பிரதமர் விளக்கம் அளிக்காவிட்டால் நாடு ஸ்தம்பிக்கும் - போராட்டம் நடத்தப் போவதாக பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் கருணாநிதி அறிவிப்பு

ரூ.570 கோடி விவகாரம்: பிரதமர் விளக்கம் அளிக்காவிட்டால் நாடு ஸ்தம்பிக்கும் - போராட்டம் நடத்தப் போவதாக பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் கருணாநிதி அறிவிப்பு
Updated on
1 min read

திருப்பூரில் இரு கண்டெய்னர் லாரிகளில் கைப்பற்றப்பட்ட ரூ.570 கோடி குறித்து பிரதமர் மோடி விளக்கமளிக்காவிட்டால் நாடே ஸ்தம்பிக்கும் அளவுக்கு போராட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.

திமுக தலைவர் கருணாநிதியின் 93-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பேசியதாவது:

நான் இன்னும் சில ஆண்டு காலம் வாழ வேண்டும் என்பதற்காக இங்கே கூடி வாழ்த்துகிற உங்களைக் கண்டு மகிழ்ச்சி அடைகி றேன். எம்.எல்.ஏ-வாகவும், எம்பி-ஆகவும் யார் ஆனார்கள் என்பதை கணக்கில் கொள்ள இந்த இயக்கம் தொடங்கப்படவில்லை.

பெரியாரின் கொள்கையில், அண்ணாவின் நெறியில் தொடங்கப் பட்ட திமுகவை, 50 ஆண்டுகளாக யாராலும் அசைக்க முடியவில்லை. தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல் படுத்திய திமுகவை வீழ்த்த பல்வேறு சூழ்ச்சிகள் நடந்தன. தேர்தல் நாளன்று வாக்கு எண்ணிக்கை முடியும் முன்பாக காலை 10 மணிக்கே பிரதமர் மோடி ஜெயலலிதாவுக்கு வாழ்த்து சொன்னார். இந்த சூதுக்கு காரணமும் ரகசியமும் என்ன?. இதற்கு பிரதமர் மோடியை நான் பகிரங்கமாக குற்றஞ்சாட்டுகிறேன்.

திருப்பூரில் 2 லாரிகளில் கைப்பற்றப்பட்ட ரூ.570 கோடி எப்படி வந்தது. இதுதொடர்பாக மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்காவிட்டால், நாட்டில் புயல் வீசுகிற மாதிரியான போராட்டத்தை திமுக நடத்தும். எனவே, அதற்கு மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

தஞ்சை, அரவக்குறிச்சியில் முதலில் தேர்தலை தள்ளி வைத்த தேர்தல் ஆணையம், அங்கே திமுக வென்றுவிடும் என்பதால், தேர்தலை ரத்து செய்துள்ளது. தேர்தல் ஆணையத்திலும் திமுகவுக்கு எதிரானவர்கள் சிலர் உள்ளனர். தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று தேர்தல் ஆணையத் துக்கு திமுகவினர் பாடம் புகட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in