Published : 05 May 2017 08:57 AM
Last Updated : 05 May 2017 08:57 AM

பசுமை தீர்ப்பாயம் இயங்க தயார் நிலையில் ‘கல்சா மகால்’: 27-ம் தேதி திறப்பு விழா

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு செயல்படுவதற்காக சீரமைக்கப்பட்டு வந்த ‘கல்சா மகால்’ தற்போது தயார் நிலையில் உள்ளது. வரும் 27-ம் தேதி நடைபெறும் திறப்பு விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு கடந்த 2012-ம் ஆண்டு முதல் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய சென்னை மாவட்ட அலுவலகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. நாட்டில் உள்ள 5 பசுமைத் தீர்ப்பாய அமர்வுகளில் தென்னிந்திய அமர்வில் மட்டும்தான் அதிகபட்சமாக ஆயிரத் துக்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. தற்காலிக இடத்தில் இடநெருக்கடி, வெளி மாநில வழக்கறிஞர்கள் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் களால் எளிதில் அணுக முடியாத நிலை போன்ற பிரச்சினைகள் இருந்து வந்தன. எனவே, உயர் நீதிமன்றத்துக்கு அருகிலேயே பசுமைத் தீர்ப்பாய அமர்வை அமைக்க வேண்டும் என்பது வழக்கறிஞர்களின் கோரிக்கையாக இருந்தது.

அதனைத் தொடர்ந்து, சேப்பாக்கத்தில் பொதுப்பணித் துறை அலுவலக வளாகத்தில் உள்ள பாரம்பரிய கட்டிடமான ‘கல்சா மகால்’ இதற்கு தேர்வு செய்யப்பட்டது. சேப்பாக்கம் பேலஸின் ஒரு பகுதியான ‘கல்சா மகால்’ 1768-ம் ஆண்டு, இந்தோ-சார்சனிக் கட்டிடக் கலையில் கட்டப்பட்டது. இது 30 ஆயிரம் சதுர அடி பரப்பு கொண்டது. கடந்த 2012-ம் ஆண்டு தீப்பிடித்து சேதமடைந்த இக்கட்டிடம் தற்போது ரூ.16 கோடியில் புதுப்பிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் வரும் 27-ம் தேதி முதல் பசுமை தீர்ப்பாயம், கல்சா மகாலில் இயங்க உள்ளது.

இது தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாய தென்னிந்திய அமர்வின், நீதித் துறை உறுப்பினர் நீதிபதி பி.ஜோதிமணி கூறியதாவது:

கல்சா மகாலை புதுப்பிக்கும் பணி நிறைவடைந்துள்ளது. வரும் 27-ம் தேதி முதல் அங்கு பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல இரு அமர்வுகளும் இயங்க உள்ளன. திறப்பு விழாவில் இரு உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஸ்வதந்த்ரகுமார் உள்ளிட்டோர் பங்கேற் கின்றனர். அன்று பிற்பகல், சுற்றுச்சூழல் தொடர்பான கருத்தரங்கமும் சென்னையில் நடைபெற உள்ளது. கல்சா மகாலில் இரு அமர்வுகள் இயங்க போதுமான இடம் உள்ளது. மேலும் 3-வது அமர்வு இயங்குவதற்குத் தேவையான இடமும் தயார் செய்யப்பட்டுள்ளது. அதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்ட பின், 3-வது அமர்வும் செயல்படும். அதில் தமிழ்நாடு சூழல் இழப்பீட்டு ஆணைய வழக்குகள் விசாரிக்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x