

புதுச்சேரி அருகே பட்டாசு குடோன் வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழந்தார். பல லட்ச ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் தீயில் எரிந்தன.
புதுச்சேரியை அடுத்த அரியாங்குப்பம் அருகே உள்ள மணவெளி பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (எ) ஞானகிருஷ்ணன் (44). அங்குள்ள ஆற்றங்கரையோரம் நாட்டு பட்டாசு தயாரிக்கும் ஆலை வைத்துள்ளார். அதன் அருகிலேயே பட்டாசு குடோனும் உள்ளது. நேற்று காலை 7.30 மணி அளவில் சேகருக்கு சொந்தமான பட்டாசு குடோன் திடீரென தீப்பிடித்தது.
அதில், இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான பட்டாசு பொருட்கள் மற்றும் பட்டாசுகள் வெடித்து சிதறியதால் பட்டாசு குடோன் தரைமட்டமானது. இந்த விபத்து நடந்தபோது குடோன் அருகில் மணவெளியை சேர்ந்த அமீர் (42) என்பவர் நின்று கொண்டு இருந்தார். அவர் மீது பட்டாசுகள் மற்றும் கற்கள் தாக்கியது. இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதுபோல, 500 மீட்டர் தொலைவில் இருந்த அய்யனார் என்பவருடைய வீட்டின் மீதும் கற்களும் பட்டாசுகளும் விழுந்தன. அதில், வீட்டின் கண்ணாடி மற்றும் சுவர்கள் பலத்த சேதமடைந்தன. வெடி விபத்து ஏற்பட்டதும் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது. ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு சத்தம் கேட்டது. உடனே, மணவெளி பகுதி மக்கள் விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அமீரை மீட்டு புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் எஸ்பி தெய்வசிகாமணி மற்றும் போலீஸார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் சுந்தர வடிவேலு உள்ளிட்டோர் நேரில் பார்வை யிட்டு விசாரணை நடத்தினர். வெடி விபத்து தொடர்பாக, பட்டாசு குடோன் உரிமையாளர் சேகர் மீது அரியாங்குப்பம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் தலைமறைவாகி விட்டதால் அவரை தேடி வருகின்றனர்.
தீபாவளி நெருங்குவதால் ஏராளமான பட்டாசு மருந்து, பேப்பர் உள்ளிட்ட பொருட்களையும் பட்டாசுகளையும் முறையாக பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமல் ஒரே இடத்தில் மொத்தமாக குவித்து வைத்திருந்ததால் அழுத்தம் ஏற்பட்டு வெப்பம் காரணமாக பட்டாசுகள் வெடித்திருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்தனர்.