அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி பகுதியில் கருவேல மரங்களை அகற்றி காய்கறி சாகுபடி

அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி பகுதியில் கருவேல மரங்களை அகற்றி காய்கறி சாகுபடி
Updated on
1 min read

கருவேல மரங்கள் அகற்றப்பட்ட 5 ஏக்கர் அரசு நிலத்தில் காய்கறிகள் சாகுபடி செய்து வரும் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி மற்ற பகுதிகளுக்கு முன்மாதிரியாக விளங்கி வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிப் பகுதியில் அரசுக்கு சொந்தமான காலி நிலங்கள் மற்றும் ஏரிகளில் உள்ள கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அச்சிறுப்பாக்கம் காவலர் குடியிருப்பு அருகே பேரூராட்சிக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலம் கருவேல மரங்கள் சூழ்ந்து முட்புதராகக் காட்சியளித்தது. இக்கருவேல மரங்களை ஜேசிபி இயந்திரம் மூலம், பேரூராட்சி நிர்வாகத்தினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அகற்றினர். அப்போது, முட்புதர்களின் மறைவில் இருந்து வெளிப்பட்ட மூன்று கிணறுகளைப் பேரூராட்சியின் பொது நிதியின் மூலம் தூர்வாரி சீரமைத்ததில், கிணறுகளில் நீர் சுரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, காலியாக உள்ள நிலத்தில் இயற்கை விவசாயம் செய்ய தீர்மானித்த பேரூராட்சி நிர்வாகத்தினர், விவசாயத்துக்குத் தேவையான வகையில் நிலத்தை உழுதனர். பின்னர், குளிர்ச்சியான சிதோஷ்ணம் நிலவும் பகுதியில் விளையும் பீட்ரூட், கேரட், காலிஃப்ளவர், முட்டைகோஸ் போன்ற காய்கறிகள் மற்றும் முள்ளங்கி வகைகள், குடை மிளகாய் உள்ளிட்டவைகள் பயிரிடப் பட்டன. இப்பயிர்களின் பாசனத் தேவையைச் சீரமைக்கப்பட்ட கிணறுகள் பூர்த்திசெய்தன. இதனால், நல்ல மகசூல் கிடைத் ததாக பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், தற்போது, செடி அவரை, மக்காச் சோளம், மிளகாய், கீரை வகைகள் பயிரிட்டுள்ளனர். கருவேல மரங்கள் அகற்றப்பட்ட நிலத்தில், தூர்ந்த கிணறுகளைச் சீரமைத்து காய்கறிகளை சாகுபடி செய்யும் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி, மற்ற பகுதிகளுக்கு முன்னுதாரணமாக விளங்கி வருகிறது.

இதுகுறித்து, அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் மத்தியாஸ் கூறியதாவது: காய்கறிப் பயிர்களுக்கு திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் இயற்கை முறையில் தயாரிக்கப் பட்ட மண்புழு உரங்களை, பயிர்களுக்கு உரமாக அளிப்பதனால் நல்ல மகசூல் கிடைக்கிறது. மேலும் உரமிடுதல், களை எடுத்தல் வாய்க்கால் வெட்டுதல், காய்கறி பறித்தல் போன்ற பணிகளை பேரூராட்சி பணியாளர்களே மேற்கொள்வதால் நிதி செலவு குறைவாக உள்ளது. இதனால், முன்னோடி இயற்கை விவசாயப் பண்ணை என பெயர் பலகை வைக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in