

போடி மலை அடிவாரம் அருகே 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது.
தேனி மாவட்டம், போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி முதல்வர் எஸ். ஈஸ்வரமூர்த்தி தலைமையில், கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர்கள் சி.மாணிக்கராஜ், ஆர். கபேஷ், ஜி.கருப்புச்சாமி ஆகியோர் நேற்று மாணவர்களை அழைத்துக் கொண்டு, போடி அருகே மரக்காமலை மலை அடிவார ஓடை பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த முதுமக்கள் தாழியை கண்டெடுத்தனர். உடைந்து சில்லுகளாக இருந்த முதுமக்கள் தாழியை சேகரித்து கல்லூரியில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
இதுகுறித்து பேராசிரியர் சி.மாணிக்கராஜ் கூறியதாவது: முதுமக்கள் தாழி கி.மு. 2,500 ஆண்டுகளுக்கு முற்பட் டவை. அதாவது சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்தவையாக இருக்கலாம். இந்த முதுமக்கள் தாழி இரண்டு அடுக்குகளாகவும், பெரிய குடுவையும், அதற்குள் சிறிய குடுவையும் காணப்படுகிறது. இவை சிவப்பு மற்றும் கறுப்பு வண்ணத்தில் உள்ளது. மேலும் குடுவையின் ஓரிடத்தில் ‘M’ போன்ற குறியீடுகள் காணப்படுகின்றன. தாழிகளில் பெரிய எலும்புகளும், பழமையான கத்தியும் இருந்தது. தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம் என்றார்.