Published : 04 Feb 2017 12:08 PM
Last Updated : 04 Feb 2017 12:08 PM

புற்றுநோயின் அறிகுறிகள் எது தெரியுமா?- விளக்குகிறார் டாக்டர் பி.குகன்

சர்வதேச புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தையொட்டி கோவை ஸ்ரீராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குநர் டாக்டர் பி.குகன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

உலக சுகாதார நிறுவனம் (டபிள்யு.ஹெச்.ஓ) 2016-2018-ம் ஆண்டை ‘உன்னால் முடியும், என்னால் முடியும்’ என்ற நோக்கில் புற்றுநோய் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன்படி, புற்றுநோயாளிகளுக்கு உதவுதல், ஆறுதல், தன்னம்பிக்கை கூறுதல், பேரணி உள்ளிட்ட நிகழ்வுகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் என 114 நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஒவ்வோர் ஆண்டும் 11 முதல் 12 லட்சம் புற்றுநோயாளிகள் கண் டறியப்படுகின்றனர். அவர்களில் 6 முதல் 7 லட்சம் பேர் உயிரிழக் கின்றனர். சுமார் 25 லட்சம் பேர் புற்றுநோயுடன் வாழ்கின்றனர்.

விழிப்புணர்வு தேவை

புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய சிகிச்சை அளிப்பது முற்றிலுமாக குணப்படுத்த வழிவகை செய்யும். அதற்கு, மக்களிடையே விழிப்புணர்வு மிகவும் அவசியம்.

பெண்கள் மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதேபோல, ஆண்கள் தொண் டைக்குழாய் புற்றுநோய் உள்ளிட்ட வற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

பேசும்போதும், உணவு சாப்பிடும்போதும் சிரமம் ஏற்படுவது, மரு அல்லது மச்சம் பெரிதாவது, வலி ஏற்படுவது, மலம், சிறுநீர் கழிக்கும்போது ரத்தம் வெளியேறுவது, நீண்ட நாட்களாக இருமல் நீடிப்பது, உடல் எடை திடீரெனக் குறைவது உள்ளிட்டவை புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம். எனவே, மருத்துவர்களை அணுகி, பரிசோதனை மேற்கொள்வது அவசியம். இதற்கு, புற்றுநோய் மருத்துவரை மட்டுமே அணுக வேண்டும் என்பதில்லை. குடும்ப மருத்துவர் அல்லது பொது மருத்துவரை அணுகி பரிசோதனை மேற்கொண்டாலே புற்றுநோயை கண்டறியலாம்.

பெற்றோர் அல்லது முன்னோர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்திருந்தால், குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதன் மூலம், ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயைக் கண்டறியலாம்.

பாப்சிமியர் பரிசோதனை

கோவை மாவட்டத்தைப் பொருத்தவரை 1 லட்சம் பேரில் சுமார் 26 பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுகிறது. எனவே, திருமணமான பெண்கள் ஆண்டுக்கு ஒருமுறையாவது பாப்சிமியர் பரிசோதனை செய்துகொள்ளலாம்.

புற்றுநோயைப் பொருத்தவரை நோயாளியின் தன்மை, நோயின் தீவிரத்தைப் பொறுத்து பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. பாரம்பரியமாக வரும் புற்றுநோயைத் தவிர்க்க முடியாது என்றாலும், சரியான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி உள்ளிட்டவை மூலம் இந்நோயைத் தவிர்க்கலாம். துரித உணவு, அதிக வண்ணம் சேர்க்கப்பட்ட உணவு, பல நாட்கள் பாதுகாத்து வைக்கப்பட்ட உணவு, கொழுப்பு மிகுந்த உணவு, புகையிலை, புகைப்பழக்கம், மது அருந்துதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண் டும். மிதமான உடற்பயிற்சியாவது மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுவது அவசியம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x