Published : 26 Jan 2014 12:25 PM
Last Updated : 26 Jan 2014 12:25 PM

சென்னை: பஸ் பயணிகளுக்கான சேவை மையம் இனி 24 மணிநேரமும் செயல்படும்

மாநகர பஸ் பயணிகளுக்கான சேவை மையம் இனி 24 மணிநேரமும் செயல்படவுள்ளது. பயணிகள் புகார் தொடர்பாக 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் மூலம் இயக்கப்படும் 765 வழித்தடங்களில் தினமும் 50 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். பஸ்களின் செயல்பாடு பற்றிய பொதுமக்களின் குறைகளை கேட்க, பயணிகளுக்கான சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இதற்கு பயணிகளிடம் இருந்து ஏராளமான புகார்கள் வந்து கொண்டு இருக்கிறது. அதேநேரத்தில் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதில்லை என குற்றச்சாட்டும் இருந்து வந்தது.

இந்நிலையில் பயணிகள் சேவை மையத்தை மேம்படுத்தி, துரிதமாக செயல்படுத்த நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே 12 மணிநேரம் இயங்கி வந்த இந்த மையம் தற்போது 24 மணிநேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து துறையின் உயர் அதிகாரிகள் கூறியதாவது:

பயணிகளுக்கு தரமான சேவைகளை வழங்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அதில் தற்போது பயணிகளின் புகார் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் வகையில் ஏற்கனவே இயங்கி வந்த பயணிகள் சேவை மையத்தை முழுமையாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பயணிகள் மாநகர பஸ்கள் குறித்து 9445030516, 9383337639, 044-23455801 ஆகிய எண்களில் பயணிகள் புகார் அளிக்கலாம். பயணிகளின் புகார் குறித்து 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், புகார் தெரிவித்த பயணிகளுக்கு எஸ்.எம்.எஸ் அல்லது போன் மூலம் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x