தமிழக விவசாயிகளின் பிரச்சினைகளை விவாதிக்க வரும் 16-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்: ஸ்டாலின் அழைப்பு

தமிழக விவசாயிகளின் பிரச்சினைகளை விவாதிக்க வரும் 16-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்: ஸ்டாலின் அழைப்பு
Updated on
1 min read

தமிழக விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வரும் 16-ம் தேதி அன்று திமுக சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காத காரணத்தாலும் - தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வறட்சியாலும், தமிழக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இதனால் தங்கள் வாழ்வாதாரத்தை முழுவதும் தொலைத்துவிட்டு டெல்லி ஜந்தர் மந்தரில் முழு நிர்வாணப் போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

இது தவிர, மாநிலத்தில் பல்வேறு இடங்களில் விவசாய அமைப்புகளும், மாணவர்கள், இளைஞர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆங்காங்கே தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் மத்திய அரசின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடியோ, மாநில முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ போராடும் தமிழக விவசாயிகளை அழைத்துப் பேசி, அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் மனப் போக்கில் இல்லை என்பது வேதனையளிக்கிறது.

கடந்த 1-4-2017 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராடும் விவசாயிகளை திமுகவின் சார்பில் நான் சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு, பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போது, "பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் விவசாயிகளின் பிரச்சினை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டம் திமுக சார்பில் கூட்டப்படும்" என்று தெரிவித்திருந்தேன்.

அதன்படி, தமிழக விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விவாதித்து - அவர்களின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி வருகின்ற 16-ம் தேதி (ஞாயிறு) அன்று காலை 10 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும்.

இக்கூட்டத்திற்கான அழைப்பு ஒவ்வொரு கட்சித் தலைவர்களுக்கும் தனித்தனியே அனுப்பியுள்ளேன். இக்கூட்டத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் - நிர்வாகிகளும் கலந்து கொள்வதோடு, தமிழக விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், அவர்களின் துயர் போக்கிடவும் ஆலோசனைகளை வழங்கிட உள்ளனர்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in