Published : 18 Feb 2017 11:20 AM
Last Updated : 18 Feb 2017 11:20 AM

வைகையில் குடிநீர் எடுப்பது நிறுத்தப்படும் அபாயம்: பெரியாறு அணை நீர்மட்டம் 110 அடியாக குறைந்ததால் மதுரைக்கு சிக்கல்

முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் நேற்று 110.3 அடியாக குறைந்ததால் வைகையில் இன்னும் 10 முதல் 15 நாள் வரைதான் மதுரை மாநகருக்கு குடிநீர் எடுக்க முடியும். அதனால் வைகையில் மதுரைக்காக குடிநீர் எடுப்பது எந்த நேரமும் நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சியில் 15 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இவர்களது பிரதான குடிநீர் ஆதாரமாக வைகை அணை இருக்கிறது. இங்கிருந்து வைகை-1, வைகை-2 திட்டங்கள் மூலம் மதுரை மாநகராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதுதவிர காவிரி கூட்டு குடிநீர் திட்டம், மாநகராட்சி பகுதிகளில் போடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் மூலமும் புறநகர் வார்டுகளுக்கு குடிநீர் விநி யோகம் செய்யப்படுகிறது. போதிய மழை பெய்யாததால் மதுரை மாநகர கண்மாய்களில் நிலத்தடிநீர் மட்டம் குறைந்தது. ஆழ்துளை கிணறுகள் வறண்டன.

காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்தும் நிர்ணயிக்கப்பட்ட குடிநீர் வரவில்லை. வைகை அணையில் நீர்மட்டம் குறைந்ததால் அங்கிருந்து வரும் குடிநீரும் குறைந்தது. கடந்த வாரம் வைகை அணையில் மதுரை மாநகருக்காக தேக்கிவைக்கப்பட்ட குடிநீர் ஆதாரம் குறைந்தது. இதையடுத்து, கடந்த 5 நாளுக்கு முன் பெரியாறு அணையில் இருந்து தினமும் 225 கன அடி தண்ணீர் குடிநீருக்காக வைகை அணைக்கு திறந்துவிடப்பட்டது. தேனி மாவட்ட குடிநீர் ஆதாரத்திற்கு பிறகு இந்த தண்ணீரில் 80, 90 கன அடி மட்டுமே தற்போது வைகை அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

வைகை அணையின் நீர்மட்டம் நேற்று 23 அடியாக இருந்தது. 80, 90 கன அடி தண்ணீர் வரும்வரைதான் வைகை அணையில் இருந்து மதுரை மாநகருக்கு குடிநீர் எடுக்கப்படும். பெரியாறில் தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டவுடன் வைகை அணையில் இருந்து மதுரை மாநகருக்கு குடிநீர் எடுப்பது நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மதுரையில் மிகப்பெரிய குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால், மாநகராட்சி அதிகாரிகள் புறநகர் பகுதிகளில் நீர் ஆதாரமுள்ள பகுதிகளில் 500 புதிய ஆழ்துளைகிணறுகள் அமைப்பதற்கு அரசுக்கு திட்டம் அனுப்பியுள்ளனர். அதற்கான நிதி இன்னும் வராததால் அந்த திட்டம் மூலமும் குடிநீர் எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பெரியாறு வைகை அணை அதிகாரி ஒருவர் கூறுகையில், முல்லைப் பெரியாறில் 108 அடி வரை தேக்கப்படும் தண்ணீர் (உறைநீர்) அணையில் நிரந்தரமாக தேக்கப்படும். இந்த தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விடமுடியாது. அதனால், இன்னும் 10 நாளில் மழைபெய்யாவிட்டால் பெரியாறில் திறந்துவிடப்படும் இந்த 225 கன அடி தண்ணீரும் நிறுத்தப்படும். அதன்பிறகு மதுரை மாநகராட்சிக்கு வைகையில் இருந்து குடிநீர் எடுப்பது நிறுத் தப்படும்.

தற்போது இருக்கிற நிலையில் இன்னும் 4, 5 நாள் மட்டுமே பெரியாறில் இருந்து வைகைக்கு தண்ணீர் திறப்படும் வாய்ப்புள்ளது.

வைகை அணையில் போதுமான அளவு தண்ணீர் இருந்தால் மதுரை மாநகராட்சி குடிநீர் தேவைக்கு ஒரு நாளைக்கு 60 கன அடி தண்ணீர் எடுக்கப்படும். தற்போது வைகை அணை நீர் மட்டம் 23 அடியாக குறைந்துள்ளதால் மாநகராட்சிக்கு வைகை அணையில் இருந்து 40 கன அடி தண்ணீர் குடிநீருக்காக எடுக்கப்படுகிறது. முல்லைபெரியாறில் இருந்து 5 நாளில் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது. அதன்பிறகு 10 நாட்கள் வரை வைகையில் மாநகராட்சி தண்ணீர் எடுக்கலாம். அதன்பிறகே தண்ணீர் எடுப்பது நிறுத்தப்படும். தற்போது மதுரை மாநகராட்சியின் குடிநீர் ஆதாரம் மழையை நம்பியே இருக்கிறது. இனி வைகை அணை யை நம்பியில்லை என்பது மட்டும் உண்மை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, புதிதாக 500 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படுகிறது. அந்த தண்ணீரை வைத்து கோடையை சமாளித்துவிடுவோம். அதற்கு மழை பெய்யும் என எதிர்பார்க்கிறோம், என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x