Published : 20 Apr 2014 09:35 AM
Last Updated : 20 Apr 2014 09:35 AM

எதிர்க்கட்சிகளை டெபாசிட் இழக்கச் செய்யுங்கள்: சென்னை பிரச்சாரத்தில் ஜெயலலிதா ஆவேசம்

திமுக உள்பட எதிர்க்கட்சி வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்று பொதுமக்களை முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டார். அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் சனிக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டபோது முதல்வர் இவ்வாறு பேசினார்.

ஆலந்தூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வி.என்.பி.வெங்கட்ராமன் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் கே.என்.ராமச்சந்திரன் ஆகியோரை ஆதரித்து நங்கநல்லூர் எம்.ஜி.ஆர். சிலை அருகில் நடந்த கூட்டத்தில் ஜெயலலிதா பேசியதாவது:

கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது தமிழக மக்களுக்கு அளித்த 177 வாக்குறுதிகளில் 150 வாக் குறுதிகள் நிறைவேற்றப் பட்டுள்ளன. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலை யில்லா அரிசி வழங்கி வருகிறோம். இளம்பெண்களுக்கு 4 கிராம் தங்கத்துடன் திருமண நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த 34 மாதங்களில் 3 லட்சத்து 47 ஆயிரம் ஏழைப் பெண்கள் பயனடைந்துள்ளனர். விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டத்தின் கீழ் சுமார் 89 லட்சம் குடும்பங்கள் பயனடைந்துள்ளன.

இரண்டரை ஆண்டுகளில் சுமார் 23 லட்சம் மேல்நிலை மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 34 மாதங்களில் மட்டும் 6 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

விலைவாசி ஏற்றத்திலிருந்து மக்களைக் காக்க, பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள், வெளிச் சந்தையில் ஒரு கிலோ அரிசி ரூ.20-க்கு விற்பனை, ஏழை மக்கள் வயிறார உண்ணும் வகையில் சென்னை மாநகராட்சியில் மட்டும் 203 அம்மா உணவகங்கள் என ஏராளமான மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

ஆலந்தூர் தொகுதி மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரூ.64 கோடியே 39 லட்சம் செலவில் ஒருங்கிணைந்த குடிநீர்த் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. நந்தம்பாக்கம் பகுதி மக்களுக்காக ரூ.6 கோடி செலவிலும், மணப்பாக்கம் பகுதி மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரூ.10 கோடியே 92 லட்சம் செலவிலும் ஒருங்கிணைந்த குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தத் தொகுதியில் 60.22 கி.மீ. நீளத்தில் 292 சாலைப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுதவிர மழைநீர் வடிகால் பணிகள், தெருவிளக்கு மின்கம்பங்கள், பூங்காக்கள் என பல பணிகளை நிறைவேற்றி யுள்ளோம். எனினும், மக்களுக்குச் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. அவற்றையும் படிப்படியாக நிச்சயம் நிறைவேற்றுவோம். ஆகவே, நடைபெறவுள்ள ஆலந்தூர் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெங்கட்ராமனை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

மேலும் மக்களுக்குத் தேவை யான மத்திய அரசின் திட்டங்களை இங்கே கொண்டு வரவும், நடக்கின்ற ரயில்வே பணிகளை விரைவுபடுத்தவும், மக்களுக்காக எங்கள் கட்சியின் குரல் மத்தியிலே ஒலிக்கவும் பெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ராமச்சந்திரனை வெற்றி பெறச் செய்ய வேண்டும். அத்துடன் திமுக வேட்பாளர் உள்பட மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரையும் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்.

இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

மத்திய சென்னையில்..

மத்திய சென்னை தொகுதியில் அவர் பேசியதாவது:

தற்போது காண்பது போன்ற மோசமான நிலையை சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் நாம் பார்த்ததும் இல்லை; கேட்டதும் இல்லை. அந்த அளவுக்கு மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. எந்த ஊழலை எடுத்தாலும் ரூ.1 லட்சம் கோடி, ரூ.2 லட்சம் கோடி ஊழல்தான். இந்த ஊழல் நிறைந்த மத்திய அரசை இப்படியே விட்டால் இந்திய நாட்டை முழுமையாக சூறையாடிவிடுவார்கள்.

எனவே, இந்த ஊழல் அரசை ஒழிப்பதே நமது முதல் குறிக்கோள். மத்திய சென்னை தொகுதியில் திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பவர் கருணாநிதி யின் பேரன் தயாநிதி மாறன். 2ஜி அலைக்கற்றை இமாலய ஊழலுக்கு அடித்தளம் அமைத்தவர் தயாநிதி மாறன்தான்.

தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது அவருடைய சென்னை இல்லத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 323 தொலைபேசி இணைப்புகள் சட்ட விரோதமாக அளிக்கப்பட்டிருந்தன. ஒரு டெலிபோன் எக்ஸ்சேஞ்சே தயாநிதி மாறன் இல்லத்தில் இருந்தது. இதனால் மத்திய அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இதுபோன்ற வேட்பாளரை வாக்காளர்கள் படுதோல்வி அடையச் செய்ய வேண்டும்.

இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

மத்திய சென்னை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமாரை ஆதரித்து ரசாக் கார்டன் சந்திப்பு, சூளை தபால் நிலையம், வால்டாக்ஸ் சாலை சந்திப்பு மற்றும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார். இன்றும் நாளையும் தொடர்ந்து சென்னையில் அவர் வாக்கு சேகரிக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x