

"தினகரனையும், அவர் சார்ந்த குடும்பத்தையும் முழுமையாக ஒதுக்கிவைக்கிறோம். தினகரன் குடும்பத்தின் தலையீடு கட்சியிலும், ஆட்சியிலும் எள்ளளவும் இருக்கக் கூடாது" தமிழக அமைச்சர்கள் அறிவித்துள்ள நிலையில் கட்சிக்கும் ஆட்சிக்கும் உகந்த முடிவை எடுப்பேன் என டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
இன்று (புதன்கிழமை) காலை சென்னை அடையாறு இல்லத்திலிருந்து புறப்பட்ட அவர் ஆங்கில செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் "கட்சிக்கும் ஆட்சிக்கும் உகந்த முடிவை எடுப்பேன். இன்று மாலை உங்களை (பத்திரிகையாளர்களை) சந்தித்து எனது முடிவை தெரிவிப்பேன். என்னை யாரும் ஓரங்கட்டமுடியாது. எனக்கும் முடிவெடுக்கும் அதிகாரம் இருக்கிறது. நான் எடுக்கும் முடிவுகள் கட்சி நலன் சார்ந்ததாகவே இருக்கும். எல்லோரும் எங்களது எம்.எல்.ஏ.க்கள்தான். அப்படியிருக்க எண்ணிக்கை அடிப்படையில் எனது ஆதரவாளர்கள் என்று யாரையும் குறிப்பிட அவசியம் இல்லை" என்றார்.
அமைச்சர்கள் இத்தகைய முடிவு எடுக்க என்ன காரணம் என நிருபர்கேட்டதற்கு "நீங்கள் இந்தக் கேள்வியை அவர்களிடம்தான் கேட்க வேண்டும்" என்று கூறிச் சென்றார்.
இதற்கிடையில், இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் வழங்கியதாக தினகரன் மீது வழக்கு பதிவு செய்துள்ள டெல்லி போலீஸ் தினகரன் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிடாமல் தடுப்பதற்காக அனைத்து விமான நிலையங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.