Published : 15 Feb 2017 01:28 PM
Last Updated : 15 Feb 2017 01:28 PM

நூல்களை வாங்குவதன் வாயிலாக எழுத்தாளர்களை அங்கீகரிக்க வேண்டும்: எழுத்தாளர் பிரபஞ்சன் பேச்சு

நூல்களை வாங்குவதன் வாயிலாக இன்றைய சமூகம் எழுத்தாளர்களை அங்கீகரிக்க வேண்டும் என்றார் எழுத்தாளர் பிரபஞ்சன்.

இனிய நந்தவனம் பதிப்பகத்தின் வெளியீடான எஸ்.செல்வசுந்தரி எழுதிய “கை நழுவும் சொர்க்கம்” என்ற சிறுகதை, “உன்னை விட்டு விலகுவதில்லை” என்ற நாவல் ஆகியவற்றின் வெளியீட்டு விழா திருச்சியில் அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த திருச்சி மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி சிறுகதை யையும், எழுத்தாளர் பிரபஞ்சன் நாவலையும் வெளியிட்டனர்.

நிகழ்ச்சியில் எழுத்தாளர் பிரபஞ்சன் பேசியது:

இன்றைய சமூகம் எழுத்தாளர்களை அங்கீகரிக்க வேண்டும். புத்தகங்களை வாங்கிப் படிப்பதே எழுத்தாளர்களுக்கு செய்யும் பெரிய உதவி. சிறுகதைகளுக்கு இன்றும் வரவேற்பு நிறைய உள்ளது. இன்னும் நிறைய சிறுகதைகள் எழுதப்பட வேண்டியுள்ளது. எழுத்தாளர்களில் யாரையும் யாருடனும் ஒப்பிடலாம். ஏனெனில், எழுத்து என்பது எல்லோருக்கும் ஒன்றுதான். எழுத்தின் மூலம் இந்தச் சமூகத்துக்கு எதைப் பிரதிபலிக்கிறோம் என்பதுதான் முக்கியம் என்றார்.

நிகழ்ச்சிக்கு எழுத்தாளர் மதுரா முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் தர்ப்பகராஜ், எழுத்தாளர் வரலொட்டி ரங்கசாமி, ஆடிட்டர் குமாரசாமி, எல்ஐசி வளர்ச்சி அதிகாரி பாஸ்கரன் ஆகியோர் பேசினர். எழுத்தாளர் ராஜ்ஜா, திருநங்கை பிரியாபாபு ஆகியோர் நூல்கள் குறித்து பேசினர். நூலாசிரியர் செல்வசுந்தரி ஏற்புரையாற்றினார். முன்னதாக, புலவர் தியாகசாந்தன் வரவேற்றார். கவிஞர் சேதுமாதவன் நன்றி தெரிவித்தார். நந்தவனம் சந்திரசேகரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x