Published : 30 Oct 2014 12:52 PM
Last Updated : 30 Oct 2014 12:52 PM

மனோன்மணீயம் பல்கலை. பட்டமளிப்பு விழா: தங்கப் பதக்கம் வென்று பார்வையற்ற மாணவி சாதனை - குமரி மாவட்ட மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்த பார்வையற்ற மாணவி எஸ்.சகாய மனோஜிக்கு பட்டமளிப்பு விழாவின்போது தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. மனம் தளராமல் போராடி படிப்பில் சாதித்த அந்த மாணவிக்கு, அமைச்சர் மற்றும் கல்வியாளர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி அருகேயுள்ள சின்னவிளை மீனவர் கிராமத்தைச் சேர்ந்த சகாயதாசன்- மங்களமேரி தம்பதியரின் மூத்த மகள் சகாய மனோஜி (21). நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி யில் பி.ஏ. வரலாறு மற்றும் சுற்றுலா பாடம் பயின்றார். அப்பாடத்தில் இவர் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், மாணவி சகாய மனோஜிக்கு தங்கப்பதக்கம் அணிவித்து சான்றிதழ் வழங்கி உயர்கல்வித்துறை அமைச்சர் பி. பழனியப்பன் பாராட்டினார்.

தற்போது கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எட். பயின்று வருகிறார். சகாய மனோஜிக்கு 9 வயது இருக்கும்போது மூளைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அதிலிருந்து அவரது இரு கண்களிலும் பார்வை பறிபோனது. எனினும், படிப்பை நிறுத்தாமல் தொடர்ந்து கல்வி கற்றார். 10-ம் வகுப்பு தேர்வில் 395 மதிப்பெண்களையும், 12-ம் வகுப்பு தேர்வில் 1,040 மதிப்பெண்களையும் பெற்றிருந்தார். கல்லூரி கல்வியை நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் பயின்றார்.

பார்வையற்றவர் என்பதற்காக பிரத்யேக வகுப்புகளுக்கு இவர் செல்லவில்லை. வகுப்பறையில் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை கேட்டறிந்து, தனது கேள்வி ஞானத்தால் தேர்வுகளில் சிறப்பிடத்தை பிடித்தார். ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை சி.டி.யில் பதிவு செய்து, வீட்டில் அதை கேட்டு படித்ததாகவும், பிரெய்லி முறையிலான புத்தகங்களையும் வாங்கி படித்ததாகவும் சகாய மனோஜி தெரிவித்தார்.

தங்கப்பதக்கம் பெற்றது குறித்து அவர் கூறும்போது, `இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. பி.எட். படித்தபின் ஆசிரியராக பணிபுரிய வேண்டும் என்பதே எனது விருப்பம்’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x