ஆன்லைன் மூலம் மருந்து விற்பதை தடுக்க வேண்டும்: மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கத் தலைவர் கோரிக்கை

ஆன்லைன் மூலம் மருந்து விற்பதை தடுக்க வேண்டும்: மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கத் தலைவர் கோரிக்கை
Updated on
1 min read

உயிர்காக்கும் மருந்துகளின் விற்பனை உரிமை பன்னாட்டு நிறுவனங்கள் கையில் சிக்கிவிடாமல் தடுக்க தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும் என தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்த சங்கத்தின் மாநில தலைவர் கோபிநாதன் நேற்று தருமபுரியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உயிர்காக்கும் மருந்துகள் என்பவை மனித வாழ்வுக்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த மருந்துகளின் உற்பத்தி மற்றும் விற்பனை உள்ளிட்டவை மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க மத்திய அரசு கடுமையான சட்டங்கள் மூலம் கண்காணிக்க வேண்டும். இந்த துறையை லாப நோக்கிலான துறையாக கருதக் கூடாது.

ஆனால், பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் நாடுகளில் மருந்து விற்பனை சந்தை சுருங்கி விட்ட நிலையில், அதை இந்தியாவில் விரிவுபடுத்த முயன்று வருகிறது. அதற்காகவே காப்புரிமை சட்ட திருத்தம் போன்றவற்றை செய்திட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு மோடி தலைமையிலான தற்போதைய மத்திய அரசும் துணை நிற்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. இதனால் நம் நாட்டின் அறிவுசார் சொத்துரிமையே பறிபோகும் நிலை உருவாகும்.

எனவே, பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய மருந்து விற்பனையில் ஏகபோகம் செலுத்தும் நிலை ஏற்படுவதற்கு முன் மத்திய அரசு அதைத் தடுக்க வேண்டும். மேலும், ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படும் மருந்து விற்பனையையும் தடுக்க வேண்டும். மருந்துகளை விற்க விளம்பரம் செய்வது, சலுகைகளை அறிவிப்பது போன்றவையும் கண்டனத்துக்கு உரியவை. நோயும், மருந்தும் எந்த மனிதருக்கும் விருப்பத்துக்குரிய ஒன்றாக இருக்க முடியாது.

இந்நிலையில், மருந்துகளை விளம்பரம் செய்து விற்பது வேதனை அளிக்கும் செயல். இதற்கு மாறாக மருந்துகளின் விலையை குறைத்தால் மக்கள் பலனடைவர். மருந்து உற்பத்தி மற்றும் விற்பனை துறையில் நிலவும் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு எதிராக தொடர்ந்து தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் போராடும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in