Published : 25 Dec 2013 05:48 PM
Last Updated : 25 Dec 2013 05:48 PM

ரூ.2 கோடி கேட்டு கல்லூரி மாணவி கடத்தல்: 3 பேர் சிக்கினர், 2 பேருக்கு வலை வீச்சு

ரூ.2 கோடி பணம் கேட்டு கல்லூரி மாணவியை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை அடையாறு அருகே சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் பிரபு. இவரது மகள் ப்ரீத்தி (19) பொறியியல் படிப்பு படித்து வருகிறார். இவர் கல்லூரியிலிருந்து வீட்டுக்கு வரும்போது பணத்துக்காக கடத்தப்பட்டார்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

எல்.ஐ.சி. முகவரான பழனிச்சாமி (27) என்பவர் பிரபுவின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் பிரபுவிடம் பணம் இருப்பதை அறிந்து கொண்ட பழனிச்சாமி தனது நண்பர்களுடன் சேர்ந்து, பிரபுவின் மகளைக் கடத்தி பணத்தை பறிக்க திட்டம் போட்டிருக்கிறார்.

இதற்காக ப்ரீத்தியை ஒரு வாரத்துக்கும் மேலாக கண்காணித்துள்ளனர். அவர் கல்லூரி பேருந்தில் சென்றுவிட்டு திரும்பி வரும் நேரம், வீட்டுக்கு செல்லும் வழியில் அவரை கடத்துவதற்கு சரியான இடம் போன்றவற்றை பழனிச்சாமியும், அவரது நண்பர்களான லோகநாதன், ராஜாமணி, முருகன், அஜய் ஆகியோர் சேர்ந்து திட்டம் போட்டு முடிவு செய்துள்ளனர்.

கடந்த திங்கள்கிழமை மாலையில் கல்லூரி முடிந்து பேருந்தில் இருந்து இறங்கி 12-வது குறுக்கு தெருவில் உள்ள வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார் ப்ரீத்தி. அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பழனிச்சாமியும் அவரது நண்பர்களும் சேர்ந்து ப்ரீத்தியை ஒரு காரில் கடத்தினர். அவருக்கு மயக்க மருந்து கொடுத்தனர். பின்னர் இரவு வரை காரிலேயே சுற்றிக் கொண்டு இருந்துவிட்டு பெருங்களத்தூரில் உள்ள ஒரு வீட்டின் அறையில் ப்ரீத்தியை அடைத்து வைத்தனர்.

கல்லூரி முடிந்து வீட்டுக்கு வரவேண்டிய மகள் நீண்ட நேரம் வராததால் அவரது பெற்றோர் ப்ரீத்தியை தேட ஆரம்பித்தனர். அவரது கல்லூரிக்கும், நண்பர்களுக்கும், பேருந்தின் ஓட்டுநருக்கும் போன்செய்து விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் பிரபுவின் செல்போனை தொடர்பு கொண்டு பேசிய பழனிச்சாமி, ப்ரீத்தியை கடத்தி வைத்திருப்பதையும், அவரை விடுவிக்க வேண்டுமானால் ரூ.2 கோடி கொடுக்க வேண்டும் என்றும் கூறினார். போலீஸுக்கு தகவல் தெரிவித்தால் மகளை கொன்று விடுவோம் என்றும் மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபு, நடந்த சம்பவங்கள் குறித்து சாஸ்திரி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். திருவான்மியூர், சாஸ்திரி நகர் காவல் ஆய்வாளர்கள் சங்கர், கிறிஸ்டியன் ஜெயஸில் ஆகியோர் தலைமையில் கடத்தல் கும்பலைப் பிடிக்க திட்டம் வகுக்கப்பட்டது. போலீஸ் அறிவுரையின் பேரில் பணம் கொடுப்பதாக பிரபு ஒப்புக்கொண்டு, பணத்தை கொடுக்கும் இடத்தையும் கேட்டார்.

போரூர், கிண்டி, தாம்பரம் என பல இடங்களுக்கு பிரபுவை வரவழைத்து போலீஸார் பின்தொடர்ந்து வருகிறார்களா? என்பதை பழனிச்சாமி மற்றும் அவரது நண்பர்கள் கண்காணித்தனர். பின்னர் ராமாபுரம் அருகே ஒரு டீக்கடைக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு பிரபுவை வரவழைத்தனர். அங்கு பணத்தை வாங்க வந்த பழனிச்சாமியை மறைந்திருந்த போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

பின்னர் பழனிச்சாமி கொடுத்த தகவலின் பேரில் பெருங்களத்தூரில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ப்ரீத்தியை மீட்டனர். மேலும், வீட்டில் இருந்த லோகநாதன், ராஜாமணி ஆகியோரையும் கைது செய்தனர். மயங்கிய நிலையில் இருந்த ப்ரீத்திக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. கூட்டாளிகள் சிக்கியதை அறிந்த முருகன், அஜய் தலைமறைவாகிவிட்டனர். அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்று போலீஸார் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x