

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிலர் தற்காலிக குடிசை அமைத்து, தங்களது குழந்தைகளுடன் அலங்காரப் பொருட்கள், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த 8-ம் தேதி மாலை, ஓசூர் பேருந்து நிலையத்தில் 2 பெண்கள், ஒரு சிறுமியுடன் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கு பணியில் இருந்து போலீஸ்காரர் வடிவேல் என்பவர், அந்த பெண்களைக் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்வதாகக் கூறி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து அத்துமீற முயற்சி செய்ததாகப் புகார் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து மாவட்ட எஸ்பி கண்ணம்மாள், சார் ஆட்சியர் பிரவீன் பி நாயர் ஆகியோர் சம்பந்தப்பட்ட பெண்களிடமும், வடிவேலுவிடமும் விசாரணை நடத்தினர். இதில், அவர் தவறு செய்தது தெரியவந்ததைத் தொடர்ந்து வடிவேலுவை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி. கண்ணம்மாள் உத்தரவிட்டதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆயுதப்படைக்கு மாற்றம்
மேலும், இது குறித்த தகவலை ஓசூர் காவல் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கணேசன், உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் இருந்ததால் கணேசன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். பாதிக்கப் பட்ட 2 பெண்கள், சிறுமி ஆகியோர் அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விசாரணை அறிக்கைக்குப் பிறகு சம்பந்தப்பட்ட காவலர் மீது மேல் நடவடிக்கை இருக்கும் எனத் தெரிகிறது.