

நீரிழிவு நோயாளிகளுக்கு கண் நரம்பு பாதிக்கப்படும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று எழும்பூர் கண் மருத்துவமனையின் தலைவர் நமீதா புவனேஸ்வரி கூறியுள்ளார்.
சென்னை மருத்துவ கல்லூரியில் வியாழக்கிழமை உலக கண் பார்வை தின விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் எழும்பூர் கண் மருத்துவமனையின் தலைவர் நமீதா புவனேஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கருத்தரங்கின் முக்கிய கருவாக நீரிழிவு நோயால் கண்களின் நரம்பு திரை பாதிக்கப்படுவது என்ற தலைப்பில் அவர் பேசியதாவது:
ஐந்து வருடங்களாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்களில் நரம்பு திரை பாதிப்புக்கு உள்ளாகும். 20 வருடங்களுக்கு மேல் நீரிழிவு உள்ளவர்களுக்கு 100 சதவீதம் இந்நோய் தாக்கப்பட்டு இருக்கும். இதனால் கண்ணில் உள்ள ரத்த ஓட்டம் குறைந்து கண்ணின் நரம்பு திரை பாதிக்கப்படும். பின்பு கண்களில் உள்ள ரத்த நாளங்கள் வெடித்து கண்ணில் ரத்த கசிவு ஏற்படும்.
முழுவதுமாக கண் பார்வை இழப்பு இதனால் ஏற்படும். இந்த கண் நரம்பு திரை பாதிப்பை சரி செய்ய முடியாது. ஆனால் நோய் அதிகரிக்காமல் கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.
நீரிழிவு நோயால் பாதிக்கப் பட்டவர்கள் ஒவ்வொரு வருடமும் கண்களை பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.