

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் கோடை விழாவை சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், துறைச் செயலாளர் அபூர்வ வர்மா, ஆணையர் பழனிகுமார் ஆகியோர் நேற்று தொடங்கிவைத்தனர்.
நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத் துறை சார்பில் 25 அடி நீளம், 6 அடி அகலம், 12 அடி உயரத்தில் 1500 கிலோ பச்சை, சிவப்பு, மஞ்சள் நிற குடமிளகாய்களைக் கொண்டு, பிரம்மாண்ட கப்பல் வடிவமைக்கப்பட்டிருந்தது.
மேலும், 300 கிலோ எடை குட மிளகாய், சுகினி, முட்டைகோஸ், இதர காய்கறிகளால் நுழைவு வாயில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு, 50 கிலோ மஞ்சள், பச்சை சுகினியைக் கொண்டு, 10 அடி உயர கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டிருந்தது.
முள்ளங்கியால் வடிவமைக்கப்பட்ட புறாக்கள்.
மதுரை மாவட்ட தோட்டக்கலைத் துறை சார்பில் தமிழர் கலாச்சார மான ஏறு தழுவுதல் காட்சிப்படுத் தப்பட்டிருந்தது. தேனி மாவட்டம் சார்பில் வன விலங்குகளின் பாது காப்பை வலியுறுத்தி, கத்தரிக் காயால் காட்டெருமை வடிவமைக் கப்பட்டிருந்தது.
கண்காட்சிக்காக சுமார் 5 டன் காய்கறிகளால் உருவாக்கப்பட்ட வடிவமைப்புகளை, சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்தனர். மேலும், மாவட்டத்தில் விளையும் காய்கறிகள், பழங்கள், பாரம்பரிய தானியங்கள் காட்சிப்படுத்தப் பட்டிருந்தன.
மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர், மாநிலங்களவை உறுப்பினர் அர்ஜுணன், குன்னூர் எம்எல்ஏ சாந்தி ராமு, தாட்கோ தலைவர் கலைச்செல்வன், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் என்.மணி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
பேரூராட்சியின் பராமரிப்பில் கோத்தகிரி நேரு பூங்கா உள்ளது. காய்கறி கண்காட்சி நடக்கும் 2 தினங்கள் மட்டுமே தோட்டக்கலைத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும். இந்நிலையில், நேற்று காய்கறி கண்காட்சியின்போது பேட்ஜ் உட்பட எந்தவித சலுகையும் தோட்டக் கலைத் துறை வழங்காததால், பேரூராட்சி ஊழியர்கள் அதிருப்தி அடைந்தனர்.
ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ராஜகோபால் மற்றும் கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் பி.நட்ராஜ் ஆகியோர் விஐபி பேட்ஜ் அணிவதை தவிர்த்தனர். கண்காட்சி இன்றுடன் (மே 7) நிறைவடைகிறது.
ஏறுதழுவுதல்
தமிழகத்துக்கு முதல் இடம்
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறும்போது, “நீலகிரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்த ஆண்டு உதகை தாவரவியல் பூங்காவில் நடக்கும் மலர்க் கண்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. சுற்றுலா துறையை மேம்படுத்தும் வகையில் மாநில அரசின் நிதி ஆதாரம், மத்திய அரசின் சுதேஷ் தர்ஷன், பிரசாத் தர்ஷன் திட்டங்களின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு, வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன.
உதகையில் சுற்றுலா மேம்பாட்டுக்கான திட்டங்கள் குறித்து முதல்வரிடம் கூறி, நிதி ஆதாரம் பெற்று நிறைவேற்றப்படும். பார்க்கிங் வசதிக்கு முன்னுரிமை வழங்கப்படும். சாலை, கழிப்பிட வசதி செய்து கொடுக்கப்படும். கேபிள் கார், ஹெலிகாப்டர் சேவை திட்டங்கள் குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும்” என்றார்.
கண்காட்சியை தொடங்கிவைத்து பார்வையிட்ட சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் அதிகாரிகள்.
அரசியல் குறித்த கேள்விகளை தவிர்த்த அமைச்சர், அதிமுக அணிகள் இணைப்பு பேச்சு வார்த்தை குறித்து கூறும்போது, ‘எம்ஜிஆர் உருவாக்கப்பட்ட இயக் கம், ஜெயலலிதாவால் ராணுவ கட்டுப்பாட்டோடு காக்கப்பட்ட இயக்கம், இரட்டை இலை சின்னம் ஆகியவை எங்கு இருக்கிறதோ, அங்கு 1.5 கோடி தொண்டர்கள் இருப்பார்கள்’ என்றார்.