

வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் அரிய வகை ஆஸ்திரேலியா கொண்டைக் கிளியை திருடிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பல்வேறு வகையான ஏராளமான பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த ஒரு ஜோடி மொலுகான் கொண்டைக் கிளிகள் தனியாக கூண்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 9-ம் தேதி கூண்டில் இருந்த கொண்டைக் கிளி ஒன்று காணாமல் போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பூங்கா நிர்வாகத்தினர் ஊழியர்கள் குழுவை கொண்டு பல்வேறு இடங்களில் கிளியை தேடிவந்தனர்.
இந்த நிலையில், நேற்று முன் தினம் ஊரப்பாக்கம் ரேவதிபுரம் அருகே ஒரு வீட்டில் நாட்டு வெடி குண்டுகளுடன் பதுங்கி இருந்த ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த கனகராஜ் (24), ஒட்டேரியை சேர்ந்த வர்கள் நரேஷ் (25), மதிவாணன் (27), ஆகிய 3 பேரையும் போலீ ஸார் பிடித்தனர். பின்னர் அவர்கள் தங்கியிருந்த வீட்டில் சோதனை செய்தபோது அரிய வகை கிளி ஒன்று இருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 3 வாலிபர்களிடம் பறவை எப்படி கிடைத்தது என்று போலீஸார் விசாரித்தனர். இதில் கடந்த 9 தேதி இரவு பூங்காவிற்குள் அமைந்துள்ள ஒட்டேரி ஏரி வழியாக நுழைந்து பறவைகள் கூண்டை உடைத்து ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த ஆண் மொலுகான் கொண்டைக் கிளி ஒன்றை திருடியதை ஒப்புக்கொண்டனர்.
இதனையடுத்து, ஒட்டேரி போலீஸார் பூங்கா நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக பூங்கா வனசரக அலுவலர் பிரசாத் ஒட்டேரி போலீஸில் புகார் செய்தார். புகாரின் பேரில் மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட கொண்டைக் கிளியை பூங்கா அதிகாரிகளிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.