

சென்னை கடல் பகுதியை கதிகலங்கச் செய்துள்ள பெட் ரோலிய கச்சா எண்ணெய் படலத்தை, அமெரிக்க வாழ் இந்திய விஞ்ஞானி கட்டமைத்து உருவாக்கிய எண்ணெய் உண்ணும் ‘சூப்பர் பக்’ பாக்டீரியா மூலம் எளிய மற்றும் பாதுகாப்பான முறையில் அகற்றலாம் என்று தஞ்சாவூரைச் சேர்ந்த பேராசிரியர் நடராஜன் தெரிவித்தார்.
சென்னை எண்ணூர் துறைமுகம் அருகில், கச்சா எண்ணெய் ஏற்றி வந்த 2 கப்பல்கள் மோதிக்கொண்ட விபத்தில், நூற்றுக்கணக்கான டன் கச்சா எண்ணெய் வெளியேறி, சென்னையின் நீண்ட கடற்பரப்பில் பரவியதால் அரிய வகை ஆலிவ் ரிட்லி ஆமைகள் உள்ளிட்ட பல்வேறு நீர் - நில வாழ் உயிரினங் கள் பாதிக்கப்பட்டுள்ளன.
அரசுகளின் பணியாளர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள் இந்த கச்சா எண்ணெய்ப் படலத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சேகரிக்க முடியாத கச்சா எண்ணெயில் உள்ள ரசாயனப் பொருட்கள் கொஞ்சம் கொஞ்சமாக நிலத்திலும், நீரிலும் ஊடுருவி அங்கு வாழும் நீர் - நில வாழ் உயிரினங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் வல்லுநர்கள்.
இந்த கச்சா எண்ணெய் படலத்தை எளிய முறையில் முழுமையாக அகற்றவும், மண்ணோடு மண்ணாக மக்கச் செய்யவும், அமெரிக்க வாழ் இந்திய நுண்ணுயிரியல் துறை விஞ்ஞானி ஆனந்த் மோகன் சக்ரபர்த்தியால் கண்டறியப்பட்டு, வளர்ந்த நாடுகளில் பயன்படுத்தப்படும் ‘சூப்பர் பக்’ (Super Bug) உயிரி தொழில்நுட்பத்தை, இங்கும் பயன்படுத்தலாம் என்கிறார் தஞ்சாவூர் பூண்டி புஷ்பம் கல்லூரி விலங்கியல் மற்றும் உயிரி தொழில்நுட்பவியல் துறை பேராசிரியர் பி.நடராஜன்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘‘கச்சா எண்ணெய் கசிவால், நீரில் காணப்படும் மிதவை உயிரிகள் (Plankton), நுண் பாசிகள், கடல் தாவரங்கள், நீர் வாழ் உயிரினங்களின் முட்டைகள், மீன் குஞ்சுகள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன. இதேபோல, கடல் பகுதியின் மேற்பரப்பில், மீன்பிடி தளங்களில், மீன் உலர்த்தும் இடங்களில் பறந்து சுற்றித் திரியும் பறவைகள் இந்த எண்ணெய் படலத்தால் கடுமையாகப் பாதிக்கப்படும்.
அள்ளியது போக, எஞ்சியுள்ள பெட்ரோலிய படிவுகளில் ஒரு பகுதி ஆவியாகவும், மற்றொரு பகுதி நீரில் உள்ள நுண்ணுயிரிகளால் சிதைக்கப்பட்ட பிறகு, கடைசியாக எஞ்சியுள்ள பகுதி, சிறு சிறு தார் உருண்டைத் துகள்களாக உருமாறி கடற்கரை மணல் துகள்களுக்கிடையே விரவுவதால் இயற்கையாக மணலில் உள்ள நுண்ணுயிர்கள் பாதிக்கப்பட்டு, நிலப்பரப்பை மாசடையச் செய்யும்.
இப்படி, பாறை இடுக்குகளிலும் மணல் வெளியிலும், நீரிலும் ஊடுருவிய எண்ணெய்க் கசிவு களை ஈர்த்து அழிக்கும் தன்மை ‘சூப்பர் பக்’ பாக்டீரியாவுக்கு உண்டு. ‘சூப்பர் பக்’ என்பது மரபணு தொழில்நுட்பம் மூலம் வடி வமைக்கப்பட்ட ‘சூடோமோனாஸ் புடிடா’ (Pseudomonas putida) என்ற ஒரு வகை நுண்ணுயிரி. இதனை, சக்ரபர்த்தி தனது சகாக்களுடன் இணைந்து 1979-ல் உருவாக்கி, காப்புரிமையும் பெற்றுள்ளார்.
இந்த ‘சூப்பர் பக்’ உயிரி மூலம், அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் எண்ணெய் கசிவு படலத்தைச் சுத்திகரிக்க 1990-ல் சக்ரபர்த்திக்கு அமெரிக்க அரசு அனுமதி அளித்தது. 4 வகையான தனித்தன்மை வாய்ந்த நுண்ணுயிரிகளை இணைத்து உருவாக்கப்படும் ‘சூப்பர் பக்’ போன்ற சிறப்பு நுண்ணுயிரியால் மட்டுமே நச்சுத்தன்மையுள்ள எண்ணெய்ப் படலத்தை முற்றாக அகற்ற முடியும்” என்றார்.