

ஆவினில் 3 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய மாதாந்திர அட்டை விநியோகம் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. விண்ணப்பித்துள்ள அனைவருக் கும் நவம்பர் முதல் புதிய அட்டைகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள 17 கூட்டுறவு மையங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 1.5 கோடி லிட்டர் பால், ஆவின் நிறுவனத்துக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் 25 லட்சம் லிட்டர் பால், மாநிலம் முழுவதும் பொது மக்க ளுக்கு விநியோகம் செய்யப் படுகிறது. மீதமுள்ள பால், இனிப்பு, நெய், தயிர், மில்க் ஷேக் உள்ளிட்ட பால் பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
சென்னையில் மட்டும் தினமும் 11.5 லட்சம் லிட்டர் பால் விநியோ கம் ஆகிறது. இதில், 5 லட்சம் குடும் பங்களுக்கு 12 லட்சம் மாதாந்திர அட்டைகள் மூலம் 7.40 லட்சம் லிட்டர் பால் வழங்கப்படுகிறது. மாதாந்திர அட்டை, ஒவ்வொரு மாதமும் 16-ம் தேதி முதல் அடுத்த மாதம் 15-ம் தேதி வரை பயன் படுத்தும் வகையில் வழங்கப்படு கிறது. தற்போது வைத்திருக்கும் மாதாந்திர அட்டைகளின் காலம் நவம்பர் 15-ம் தேதியுடன் முடிவடை கிறது. நவம்பர் 1-ம் தேதி முதல் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தப்படுவதால், அட்டைதாரர்கள் நவம்பர் 1 முதல் 15 நாட்களுக்கான கூடுதல் விலையை செலுத்த வேண்டும். நவம்பர் 16-ம் தேதி முதல் புதிய கட்டணத்தில் அட்டைகள் வழங்கப்படும்.
புதிய மாதாந்திர அட்டை
கொள்முதல் விலை குறைவாக இருப்பதாக கூறி, உற்பத்தி யாளர்கள் பலர் ஆவின் கூட்டுறவு மையங்களுக்கு பால் வழங்குவதை குறைத்துக் கொண் டனர். இதனால், கடந்த 3 மாதங்களாக பால் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, புதிதாக மாதாந்திர அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு பால் வழங்கப்படவில்லை.
தற்போது, கொள்முதல் விலையை பசும்பாலுக்கு ரூ.5, எருமைப் பாலுக்கு ரூ. 4 என அரசு உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக கூட்டுறவு மையங்க ளில் பால் கொள்முதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, 3 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய அட்டை விநியோகம் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. ஏற்கெனவே விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு நவம்பர் முதல் மாதாந்திர அட்டைகள் வழங்கப்படும் என ஆவின் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
நவம்பர் மாதாந்திர அட்டை பால் விலை விவரம்:
ஒரு லிட்டர் சமன்படுத்தப்பட்ட பால் (நீல நிறம்) ரூ.1,020, நிலைப் படுத்தப்பட்ட பால் (பச்சை) ரூ.1,170, நிறை கொழுப்பு பால் (ஆரஞ்சு) ரூ.1,290, இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (மெஜந்தா) ரூ.990 ஆக இருக்கும் என ஆவின் தரப்பில் கூறப்படுகிறது.