

கும்பகோணத்தை அடுத்த சோழன்மாளிகை ஊராட்சியில் சுமார் 50 ஆண்டுகளாக காணாமல் போன குளத்தை அதிகாரிகள் மீட்டனர். இதையடுத்து, அந்தக் குளத்தை தூர் வாரும் பணி நேற்று தொடங்கியது.
சோழன்மாளிகையில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை பல்லவ குளம் இருந்தது. இந்தக் குளத்துக்கு சோழன்மாளிகை வாய்க்காலிலிருந்து தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்தக் குளம் வயல் பகுதியில் இருந்ததால், அருகில் உள்ளவர்கள் குளத்தை தூர்த்து ஆக்கிரமித்திருந்தனர்.
எனவே, இந்தக் குளத்தை மீட்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, குடிமராமத்து பணியின் கீழ் குளத்தை மீட்டு தூர் வார முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கும்பகோணம் வட்டாட்சியர் கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கே.மாரியப்பன், கே.முருகன், அரசு வழக்கறிஞர் அறிவழகன், வருவாய் ஆய்வாளர் பிரபு, கிராம நிர்வாக அலுவலர் தேன்மொழி ஆகியோர் நேற்று அங்கு சென்று குளம் இருந்த பகுதியை மீட்டனர். தொடர்ந்து, அங்கு பொக்லைன் இயந்திரம் மூலம் தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது.