

பாலாற்றின் கரையோரங்களில் முறைகேடாக மணல் கடத்தலுக்கு உதவியதாக, விவசாயிகளுக்கு வருவாய்த் துறையினர் நோட்டீஸ் வழங்க தயாராகி வருகின்றனர். மேலும், கனிம வளத் துறை மூலம் அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வாலாஜா அடுத்த பூண்டி குவாரியில் இருந்து நாள்தோறும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மணல் அனுப்பப்பட்டது. 24 மணி நேரமும் மணல் அள்ளியதால் பாலாற்றின் வழித்தடம் அழிக்கப்பட்டதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக் கின்றனர்.
இதற்கிடையில், பாலாற்றில் மணல் அள்ளும் குவாரிக்கான உரிமம் முடிந்துவிட்டது. ஆனால், கிடங்கில் இருப்பு வைத்துள்ள மணலை விற்பனை செய்வதற்கான அனுமதி மட்டும் உள்ளது. இதைப் பயன்படுத்தி பூண்டியிலிருந்து திருப்பாற்கடல் வரையிலான பாலாற்றின் கரையோரங்களில் இருக்கும் விவசாய நிலங்களை சிலர் முறைகேடாக பணம் கொடுத்து குத்தகைக்கு வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
அந்த நிலத்தின் மேற்பரப்பில் இருக்கும் மண்ணை அகற்றிவிட்டு 30 முதல் 40 அடி ஆழம் வரை மணல் அள்ளியுள்ளனர். விவசாய நிலங்களில் முறைகேடாக மணல் அள்ளுவது குறித்த புகாரின்பேரில், ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் ராஜ லட்சுமி தலைமையில் வருவாய்த் துறையினர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பூண்டி, சாத்தம்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் நேற்று முன்தினம் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.
விவசாய நிலங்களில் மணல் அள்ளும் பணியைத் தடுத்து நிறுத்திய வருவாய் கோட்டாட்சியர் ராஜலட்சுமி, கிடங்கில் இருப்பு வைத்துள்ள மணலை காலி செய்யுமாறு உத்தரவிட்டார். இதை யடுத்து, விவசாய நிலங்களில் மணல் அள்ளிக் கொண்டிருந்த லாரிகளை கிடங்குக்கு அனுப்ப உத்தரவிட்டார்.
மேலும், கிராமங்களிலிருந்து ஆற்றுக்கு வரும் பாதைகளில் பெரிய பள்ளங்கள் ஏற்படுத்தப் பட்டன. கிடங்கில் இருப்பு வைத்துள்ள மணல் இன்றைக்குள் காலி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அதன் பிறகே வருவாய்த் துறையினரும் காவல் துறையினரும் அங்கிருந்து புறப்பட உள்ளனர்.
இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘குவாரிக்கான உரிமம் இல்லாத நிலையில் நூதன முறையில் மணல் கடத்தலைத் தடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. விவசாய நிலங்களில் 40 அடி ஆழத்துக்கு மணல் அள்ளியதால் பல இடங்களில் நீருற்று ஏற்பட்டுள்ளது. அடையாளம் காண முடியாத அளவுக்கு விவசாய நிலங்கள் சிதைக்கப்பட்டுள்ளன. அவற்றை எல்லாம் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. முறை கேடாக மணல் அள்ள அனுமதித்த விவசாயிகளுக்கு நோட்டீஸ் வழங்க உள்ளோம். கனிம வளத்துறை அனுமதி இல்லாமல் மணல் அள்ளியது தொடர்பாக அபராதமும் விதிக்கப்படும்.
ஓரிரு நாளில் பூண்டி பாலாற்றில் மணல் கடத்தல் முற்றிலும் இருக் காது. கிடங்கில் இருப்பு வைத் துள்ள மணலை காலி செய்யும் பணியை, வருவாய் கோட்டாட்சியர் ராஜலட்சுமி நேரடியாக ஆய்வு செய்து வருகிறார்.
புதிய மணல் குவாரிக்கு அரசின் அனுமதி கிடைக்கும் வரை மணல் கடத்தலைத் தடுப்பதே முக்கிய பணியாக உள்ளது’’ என்றனர்.