உத்தரப் பிரதேச விவசாயிகளுக்கு மட்டும் பயிர் கடன் தள்ளுபடியா?- அன்புமணி கண்டனம்

உத்தரப் பிரதேச விவசாயிகளுக்கு மட்டும் பயிர் கடன் தள்ளுபடியா?- அன்புமணி கண்டனம்
Updated on
2 min read

உத்தரப் பிரதேச விவசாயிகளின் பயிர் கடன் மட்டும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக இளைஞரணித் தலைவரும், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது. அதேநேரத்தில் உத்தரப் பிரதேச விவசாயிகளின் பயிர் கடன் மட்டும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

நடாளுமன்ற மக்களவையில் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்றுப் பேசிய உறுப்பினர்கள் பலரும், பொதுத்துறை வங்கிகள் மூலம் விவசாயிகள் பெற்ற பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய நான், ''இந்தியா கிராமங்களில் தான் வாழ்கிறது. இந்திய மக்களில் மூன்றில் இரு பங்கினர் விவசாயத்தையே நம்பியிருக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு நாம் உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை. அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய கொள்முதல் விலை வழங்கப்படவில்லை.

உதாரணமாக ஒரு குவிண்டால் நெல் உற்பத்தி செய்ய ரூ.1529 செலவு ஆவதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மதிப்பீடு செய்திருக்கிறது. ஆனால், மத்திய அரசோ குவிண்டால் நெல்லுக்கு கொள்முதல் விலையாக ரூ.1470 மட்டுமே வழங்குகிறது. இதனால் விவசாயிகளுக்கு இழப்பு தான் ஏற்படுகிறது.

எனவே. உற்பத்தி செலவுடன் 50% லாபம் சேர்த்து ஒரு டன் கரும்புக்கு ரூ.3475, ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2440 வீதம் கொள்முதல் விலை வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும். இந்த விலை கொடுக்கப்பட்டால் விவசாயிகளுக்கு வேறு மானியம் தேவையில்லை; கடன் தள்ளுபடியும் தேவையில்லை.

இந்த உலகில் எனது பெற்றோருக்கு அடுத்தபடியாக, விவசாயிகளைத் தான் கடவுளராக நான் பார்க்கிறேன். காரணம், நாம் வாழும் வரை அவர்கள் தான் நமக்கு உணவளிக்கப் போகின்றனர். தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் மட்டும் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியால் மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்துள்ளனர். ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்டாலும் அது மத்திய, மாநில அரசுகளுக்கு அவமானம் என்று கருதி அதை தடுக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறினேன். விவசாயிகளின் நலனுக்கான கருத்துக்களை மக்களவை உறுப்பினர்கள் வரவேற்றனர்.

ஆனால், இந்த விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதா மோகன் சிங், உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்கவில்லை. குறிப்பாக விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்பது குறித்து உத்தரவாதம் அளிக்க மறுத்து விட்டார்.

அதேநேரத்தில், ''உத்தரப் பிரதேசத்தில் உள்ள விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய பயிர் கடன்களை அம்மாநில அரசு தள்ளுபடி செய்யும். அதனால், அம்மாநில அரசுக்கு ஏற்படும் நிதிச்சுமையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும்'' என மத்திய அமைச்சர் ராதாமோகன் சிங் வாக்குறுதி அளித்தார்.

இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களும் ஏதோ ஒரு வகையில் விவசாயத்தை சார்ந்திருக்கும் நிலையில், ஒரு மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு மட்டும் பயிர் கடன் தள்ளுபடி சலுகை வழங்குவது நியாயமற்றது; இதை ஏற்க முடியாது.

ஒப்பீட்டளவில் பார்த்தால் உத்தரப் பிரதேச விவசாயிகளை விட தமிழ்நாட்டு விவசாயிகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வயலில் பயிர்கள் வாடிக்கிடப்பதை தாங்கிக் கொள்ள முடியாமல் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து உயிரிழக்கிறார்கள் என்றால் அவர்கள் எந்த அளவுக்கு மன உளைச்சலுக்கும், இழப்புக்கும் ஆளாகியிருப்பார்கள் என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பாஜகவுக்கு வாக்களித்த விவசாயிகளுக்கு மட்டும் கடன் தள்ளுபடி; மற்ற மாநில விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி இல்லை என்பது எந்த வகையிலும் நியாயமாக இருக்காது.

மாறாக, பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றால் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறுவதைப் போல் தான் மத்திய அமைச்சரின் அறிவிப்பு அமைந்திருக்கிறது. அனைவருக்கும் பொதுவாக செயல்பட வேண்டிய மத்திய அரசு ஒரு மாநில விவசாயிகளுக்கு மட்டும் சாதகமாக செயல்பட்டு விவசாயிகளிடையே பிளவை ஏற்படுத்தக் கூடாது.

எனவே, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளும் மீளமுடியாத கடன் வலையில் சிக்கியுள்ளனர் என்பதை உணர்ந்து, அனைத்து மாநில விவசாயிகளும் பொதுத்துறை வங்கிகளில் வாங்கிய பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in