காக்கியும் கருப்பும் கைகோக்குமா?

காக்கியும் கருப்பும் கைகோக்குமா?
Updated on
2 min read

உயர் நீதிமன்ற வளாகம். 2009, பிப்ரவரி கலவரம் மட்டும் அல்ல... கடந்த 20 ஆண்டுகளாகவே காவல் துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் மோதலுக்குரிய களமாகத்தான் இருக்கிறது. பிரச்சினை, வளாகம் அல்ல. வன்மம். ஒன்றுத் தொட்டு இன்னொன்று, அதனைத் தொட்டு மற்றொன்று என்று பிரச்சினைகளின் கண்ணிகள் அறுந்துவிடாமல் இருதரப்பினருமே முனைந்து முனைந்து கோக்கிறார்கள். மக்களுக்கான பாதுகாப்பையும் சமூக நீதியையும் கட்டிக்காக்கும் சம பொறுப்புள்ள அதிமுக்கியத் துறைகளின் மோதல் போக்கை களையவே முடியாதா?

முடியாது. ஆனால், சம்பவங்களின் எண்ணிக்கையையும் வீரியத்தையும் குறைக்கலாம். ஏனெனில் இரு துறைகள் சார்ந்த பணிகளும் எதிரெதிர் தன்மையைக் கொண்டவை. நீ கைது செய்தால் நான் விடுவிப்பேன் எனும்போது அங்கு ஒருமித்தக் கருத்து நிலவ வாய்ப்பு இல்லை. இது தொழில்ரீதியாக ஆரோக்கியமான விஷயமே. பிரச்சினை இதில் இல்லை. சட்டம் சார்ந்த இருவருமே சட்டத்தை மீறுவது அல்லது சட்டத்தை சரியாக கற்காததுதான் பிரச்சினை.

டி.கே.பாசு வழக்கின் 11 கட்டளைகள் இங்கே எத்தனை காவல் துறையினருக்குத் தெரியும்? இதுபோன்ற மோதல் போக்குகளின்போது சூழலைச் சமாளிக்க உயர் நீதிமன்ற உயர் மட்டக் கமிட்டியை நாட வேண்டும் என்பது இங்கு எத்தனை வழக்கறிஞர்களுக்குத் தெரியும்? ஆனால், அலட்சியமும் விதிகளை மீறலாம் என்று காலம் காலமாக நம் வாழ்வியல் நடைமுறையில் கற்பிக்கப்பட்ட அபத்த சூழலும் கொண்ட இந்திய பொதுப்புத்தியின் அங்கம்தானே இவர்களும்!

நேற்று முன்தின சம்பவத்தை எடுத்துக்கொள்வோம். கைது செய்ய ஆயிரம் இடங்கள் இருக்கின்றன. எதற்காக உயர் நீதிமன்றத்தை தேர்வு செய்தார் அந்த உதவி ஆய்வாளர். எதிராளியின் கோட்டைக்குள்ளேயே சென்று அவரை தூக்குகிறேன் பார் என்கிற தேவையற்ற, ஹீரோயிஸம் காட்ட முனைந்த மனோபாவம்.

முன்னாள் நீதியரசர் சந்துருவுக்கு இந்த விஷயத்தில் ஆதங்கம் மிக அதிகம். ‘‘2009-ம் ஆண்டுக்கு முன்பேயே உயர் நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், இயக்கம் நடத்தக்கூடாது; சுவரொட்டி வெளியிடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆனால், எத்தனை பேர் அதனைப் பின்பற்றுகிறார்கள்? 2006-ல் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், ‘எங்களுக்கும் காவல் துறையினருக்கும் அடிக்கடி பிரச்சினைகள் வருகின்றன. அவற்றை தீர்க்க கமிட்டி வேண்டும் என்றது. அதன்படி அன்று தலைமை நீதிபதியான ஏ.பி.ஷாவும் நானும் இருந்த பெஞ்சு உயர்மட்டக் கமிட்டியை அமைக்க தீர்ப்பு அளித்தது. அந்தக் கமிட்டிக்கு இன்று யாரும் பிரச்சினைகளை கொண்டு செல்வது இல்லை. எல்லாவற்றுக்கும் பணி புறக்கணிப்பு எப்படி தீர்வாகும்?

வழக்கறிஞர்களும் காவலர்களும் ஒருவர் இடத்துக்கு ஒருவர் பரஸ்பரம் செல்லும்போது விருந்தோம்பல் அவசியம். காவலர்கள் ஆகட்டும், வழக்கறிஞர்கள் ஆகட்டும் தாங்கள் தவறு செய்யும்போது தவறை நியாயப்படுத்த தங்கள் கூட்டத்தின் வலிமையை நம்புவதும் சட்டத்தை மீறுவதும் தவறு.

இதற்கு தீர்வு என்று பார்த்தால் நீதிமன்ற பணிக்கு பயிற்சி இல்லாத, பக்குவம் இல்லாத காவலர்களை அனுப்பக்கூடாது. அல்லது அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க வேண்டும். மூத்த வழக்கறிஞர்கள் இளம் வழக்கறிஞர்களுக்கு கடுமையான சூழல்களை சமாளிக்க பயிற்சி அளிக்க வேண்டும். நீதிபதிகளும் தங்களது அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். தனிப்பட்ட பகைக்கு அஞ்சி ஒதுங்கிப்போகக்கூடாது” என்றார்.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயலாளர் அறிவழகன், ‘‘சென்னை உயர் நீதிமன்றத்தில் குடும்ப நல நீதிமன்றம், தொழிலாளர் நல நீதிமன்றம், சிவில் நீதிமன்றங்கள் என நிறைய உப நீதிமன்றங்கள் இருக்கின்றன. எனவே இங்கு வரும் கூட்டம் அதிகம்; பிரச்சினைகளும் அதிகம். களேபரங்களுக்கு காரணம் இதுதான். எனவே உப நீதிமன்றங்களுக்கு தனிக் கட்டிடங்கள் தேவை. அதனைச் செய்தாலே பிரச்சினைகள் வெகுவாக குறைந்துவிடும்.” என்றார்.

மொத்தத்தில் காவல் துறையும் நீதித்துறையும் பரஸ்பரம் பகை மறந்து, ஈகோ துறந்து கைகோத்தால் மட்டுமே அமைதி நிரந்தரமாகும்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in