Published : 01 Oct 2013 01:31 PM
Last Updated : 01 Oct 2013 01:31 PM

இங்கே குற்றவாளிகள் கண்காணிக்கப்படுகிறார்கள்!

கேமரா கண்காணிப்பில் தமிழகம் 2-வது இடம்

சென்னையில் நடந்த டாக்டர் சுப்பையா படுகொலை வழக்கில் குற்றவாளிகளை அடையாளம் காண கண்காணிப்பு கேமராவின் பதிவுகள் போலீஸாருக்கு பெரிதும் உதவியிருக்கின்றன. அண்மைக் காலங்களில் பல்வேறு வழக்குகளில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்ற நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் கேமராக்களை கையாள்வதில் நாட்டிலேயே தமிழ்நாடு காவல் துறை இரண்டாம் இடத்தில் இருப்பதாக அறிவித்துள்ளது மத்திய உள்துறையின் காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு.

துப்பு துலக்கிய கேமராக்கள்

சென்னை நகரில் மட்டும் 2013-ம் ஆண்டு தவிர்த்து முந்தைய மூன்று ஆண்டுகளில் 509 கொலைகள் நடந்துள்ளன. அண்மைக் காலங்களில் குற்றங்களில் துப்பு துலக்குவதில் கண்காணிப்பு கேமராக்களின் பங்கு மிக அதிகம். சில ஆண்டுகளுக்கு முன்பு எம்.எம்.டி.ஏ. காலனி அருகே இளைஞர் ஒருவரின் படுகொலை காட்சிகள் கேமராவில் பதிவாகி இருந்ததைத் தொடர்ந்து கொலையாளிகள் கைது செய்யப்பட்டனர். பெருங்குடி மற்றும் மதுரவாயலில் வங்கிகளில் கொள்ளை அடித்த வட மாநில இளைஞர்களைக் காட்டிக்கொடுத்ததும் கண்காணிப்பு கேமராக்களே.

தவிர, ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் திருடிச் செல்லப்பட்ட குழந்தையை மீட்டது, மதுரவாயலில் அடகுக்கடை அதிபர் கொலை, செட்டிநாடு வித்யாஸ்ரம் பள்ளிச் சிறுவன் கடத்தல், திருமங்கலம் முதியவர் கொலை, ஏடிஎம் மையத்தில் நடந்த கொள்ளை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகளில் கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

உஷார், நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்!

தமிழகத்தின் அனைத்து முக்கிய பெரிய கோயில்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், அரசு, தனியார் மருத்துவமனைகள், வங்கிகள் உள்ளிட்ட பொது இடங்களில் 24 மணி நேரமும் கேமராக்கள் கண் விழித்திருக்கின்றன. நகைக் கடைகள், பெரிய ஜவுளிக் கடைகள், பல்பொருள் அங்காடிகள், ஏழு வீடுகளுக்கும் அதிகமாக கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள், நகை அடகுக் கடைகள், வங்கி மற்றும் ஏ.டி.எம். மையங்கள், தனியார் மருத்துவமனைகள், மருந்து விற்பனை நிலையங்கள் ஆகிய இடங்களில் கேமரா பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எங்கெங்கு கேமரா கண்காணிப்பு கூடாது?

கண்காணிப்பு எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு தனி மனித சுதந்திரமும் முக்கியம். தங்கும் விடுதி அறைகள், குளியல் அறைகள் போன்ற தனி மனித அந்தரங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளும் இடங்களில் கேமராக்கள் பொருத்தப்படக் கூடாது. இதுகுறித்து ‘எவிடென்ஸ்’ மனித உரிமைகள் அமைப்பின் செயல் இயக்குநர் கதிர், ‘‘பெண்கள் அதிகம் பணிபுரியும் ஜவுளிக்கடை, ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள், பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட இடங்களில் திருட்டு போகும் அபாயம் இருப்பதால் கேமராக்கள் வைக்கிறோம் என்கிறார்கள். ஆனால், அங்கு தங்கள் உடைகளை சரி செய்யக்கூட பெண்கள் அவஸ்தைப்படுகிறார்கள். இன்னும் சில நிறுவனங்களில் பெண்களை கேமராக்கள் மூலம் ‘ஜூம்’ செய்து பார்ப்பதாகவும் குற்றச்சாட்டுகள் வருகின்றன. பொதுவாக பணிபுரியும் இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவால் ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்” என்றார்.

கேமரா தொழில்நுட்பம் குறித்து சிந்தாதிரிப்பேட்டையில் இருக்கும் கரிஷ்மா குளோபல் இம்பக்ஸ் கேமரா நிறுவனத்தின் உரிமையாளர் பிரவீண் குமார் ‘‘16 வகையான பகல் மற்றும் பகல் - இரவு கேமராக்கள் சந்தையில் கிடைக்கின்றன. டிஜிட்டல் வீடியோ ரிக்கார்டரில் நான்கு முதல் 32 கேமராக்களை பொருத்தி கண்காணிக்க முடியும். இதற்கான ஹார்டு டிஸ்க் 250 ஜி.பி. முதல் 2 டி.பி. வரை கிடைக்கிறது. இணையத் தொழில்நுட்பத்தை இத்துடன் இணைத்துவிட்டால் ஒருவர் வீட்டில் இல்லாவிட்டாலும் அவரது மொபைல் போன் மூலம் உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் அவரது வளாகத்தைக் கண்காணிக்கலாம். கண்காணிப்புக் கேமரா ரூ.1600 தொடங்கி 15,000 வரையிலும் டிஜிட்டல் வீடியோ ரிக்கார்டர் ரூ.4500 தொடங்கி 22,000 வரையிலும் ஹார்டு டிஸ்க் ரூ.4000 தொடங்கி 6,700 வரையிலும் கிடைக்கிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x