Last Updated : 09 Jan, 2017 09:47 AM

 

Published : 09 Jan 2017 09:47 AM
Last Updated : 09 Jan 2017 09:47 AM

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று அதிகாலை 5 மணிக்கு நடைபெற்றது. இந்த உற்சவத்தில் பங்கேற்ற பக்தர்கள் ரங்கா, கோவிந்தா என பக்திப் பரவசத்துடன் கோஷமிட்டு நம்பெருமாளை வழிபட்டனர்.

108 வைணவ திவ்ய தேசத் தலங்களில் முதன்மையான தலம் என்றும் பூலோக வைகுண்டம் என்றும் போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த டிச.28-ம் தேதி திருநெடுந் தாண்டகத்துடன் தொடங்கியது. பகல் பத்து திருநாள் டிச.29-ம் தேதி தொடங்கியது. வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு ராப்பத்து திருநாளின் முதல் நாளான நேற்று நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலை 2.30 மணி முதல் மூலவரான ரங்கநாதர், உற்சவரான நம்பெருமாள் ஆகியோருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் ரத்தின அங்கி, கிளி மாலை, பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் அதி காலை 3.45 மணிக்கு புறப்பட்டு சந்தனு மண்டபம், ராஜமகேந்திரன் திருச்சுற்று, நாழிகேட்டான் வாயில், தங்கக் கொடிமரம் வழியாக பிரதட்சணமாக இரண்டாம் பிரகாரமான குலசேகரன் திருச்சுற்று வழியாக விரஜா நதி மண்டபத்தை வந்தடைந்தார். இதைத் தொடர்ந்து அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக நம்பெருமாள் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் ரங்கா, கோவிந்தா என பக்தி பரவசத்துடன் கோஷமிட்டு வழிபட்டனர்.

சொர்க்கவாசலை கடந்து வந்த நம்பெருமாள் சந்திர புஷ்கரணி, ராமர் சன்னதி, நடைப்பந்தல் வழியாக 5-ம் பிரகாரம் எனப்படும் திருக்கொட்டகை பகுதிக்கு வந்தார். அங்கு நம்பெருமாளுக்கு சாதரா மரியாதை செய்யப்பட்டது. பின்னர் ஆயிரங்கால் மண்டபத்துக்கு வந்த நம்பெருமாளுக்கு அலங்காரம், அமுது செய்யப்பட்டு, பக்தர்கள் சேவை தொடங்கியது.

தொடர்ந்து மாலையில் அரையர் சேவை, இரவு திருப்பாவாடை கோஷ்டி, வெள்ளிச் சம்பா அமுது செய்தல் உள்ளிட்டவை நடைபெற்றன. பின்னர் இரவு 12 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, வீணை வாத்தியத்துடன் இன்று (ஜன.9) அதிகாலை 1.15 மணிக்கு மூலஸ்தானத்தை சென்றடைந்தார்.

படங்கள் : ஜி.ஞானவேல் முருகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x