

நீதிமன்றங்களில் குவியும் சிறு வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காகவும் மோட்டார் வாகனங்களில் செல்லும் சிறு குற்றம் புரிந்தவர்களை அலையவிடாமல் தண்டிக்கும் நோக்கத்திலும் உருவாக் கப்பட்டவை மொபைல் கோர்ட் எனப்படும் நடமாடும் நீதிமன்றங்கள். திருச்சியில் இந்த நடமாடும் நீதிமன்றம் போதிய பணியாளர்கள் இல்லாமல் சுமார் ஓராண்டாக முடங்கிப்போயுள்ளது.
2012-ம் ஆண்டு ரூ.15 லட்சம் மதிப்பில் ஒரு நவீன பேருந்து அதன் உள்புறம் நீதிமன்றம் போலவே வடி வமைக்கப்பட்டு நடமாடும் நீதிமன்றம் ஆக செயல்பட திருச்சிக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டது. இதில் சாலை விதிமீறல், வாகனப் போக்குவரத்து விதிமீறல் குற்றங்கள் தொடர்பான வழக்குகள் விசாரித்து, உடனுக்குடன் அபராதம் விதிக்கப்படும் பணிகள் நடைபெற்றன. இந்த நடமாடும் நீதிமன்றம் திருச்சி மாவட்டத்தின் தொலைதூர பகுதிகளுக்கும் தினந்தோறும் சென்று தனது கடமையைச் செய்து வந்தது.
ஆனால் சுமார் ஓராண்டாக நடமாடும் நீதிமன்றத்துக்கு குற்றவியல் நடுவர் நியமிக்கப்படாததால் அந்த நீதிமன்றம் முடங்கியுள்ளது. இந்த நீதிமன்றம் செயல்பட குற்றவியல் நடுவர், தட்டச்சர், இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் தலா ஒருவர் என நீதித்துறையைச் சேர்ந்தவர்கள் 4 பேரும், ஒரு பாதுகாவலர், ஒரு வாகன ஓட்டுநர் என காவல்துறையிலிருந்து இருவரும் பணி செய்ய தேவை. காவல்துறையினர் அவர்கள் தரப்பில் வழங்க வேண்டிய ஓட்டுநர், பாதுகாவலர் பணிக்கான ஆட்களை வழங்கியுள்ளனர்.
இவர்கள் தினமும் நடமாடும் நீதிமன்ற வாகனத்தை நீதிமன்றத் திலிருந்து எடுத்துச் சென்று திருச்சி மாநகராட்சி அருகேயுள்ள ஒரு குறுக்குச் சந்தில் ஆல மர நிழலில் நிறுத்தி இளைப்பாறுகின்றனர். பிறகு மாலை நேரம் ஆகிவிட்டால் அந்த வாகனத்தை ஓட்டிவந்து நீதிமன்றத்தில் ஒப்படைத்துவிட்டுச் செல்கின்றனர்.
கேள்விக்குறியாகிவிட்ட நோக்கம்…
“நீதித்துறையில் பணியாளர் பற்றாக்குறை இருப்பதால் குற்றவியல் நடுவர் நியமிக்கப்படவில்லை. இவர்களை நியமிக்க வேண்டியது உயர் நீதிமன்றத்தின் வேலை. மேலும், நடமாடும் நீதிமன்ற வாகனத்துக்காக அரசு மாதந்தோறும் வழங்கும் 150 லிட்டர் டீசல் 10 நாட்களுக்குக்கூட போதாது” எனக் கூறுகின்றனர் நீதித்துறையைச் சேர்ந்தவர்கள். இந்த வாகனம் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று வந்தபோது சராசரியாக தினமும் 50 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு பைசல் செய்யப்பட்டன. இப்போது அந்த வழக்குகள் குற்றவியல் நீதிமன்றங்களுக்கு வருவதால் இந்த நடமாடும் நீதிமன்றம் கொண்டுவரப்பட்டதன் நோக்கம் நிறைவேறாமலிருக்கிறது.
“உயர் நீதிமன்றம் முறைப்படி அறிவிப்பு செய்து தேர்வு மூலம் பணியாளர்களை தெரிவு செய்யும். அதுவரை குற்றவியல் நடுவர் எண் 2-ன் நடுவர் இந்த நடமாடும் நீதிமன்ற நடுவராக கூடுதல் பொறுப்பில் இப்பணிகளை கவனித்து வருகிறார். ஏற்கெனவே அந்த நீதிமன்றத்தில் ஏராளமாக வழக்குகள் குவிந்து கிடப்பதால் அவர் நடமாடும் நீதிமன்ற வாகனத்தில் தினமும் ஒரு பகுதிக்குச் சென்று பணியாற்ற இயலாத நிலை உள்ளது. விரைவில் நடமாடும் நீதிமன்றத்துக்கு தனி மாஜிஸ்திரேட் ஒருவரை நியமித்து இந்த நீதிமன்றம் சிறப்பாக செயல்பட நீதித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் திருச்சி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் செயலரான ஜெயசீலன்.
இதுகுறித்து திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்ற முதன்மை நிர்வாக அலுவலர் மல்லிகாவிடம் கேட்டதற்கு, “இதுபற்றி உயர் நீதிமன்றத்திற்கு தகவல் அளித்து விட்டோம். விரைவில் போதியப் பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் நிலைமை சரிசெய்யப்படும்” என்றார்.