

பரந்து விரிந்த புல்வெளிகளையும், குட்டையான பசுமை மாறாக் காடுகளையும் ஒருங்கிணைந்த வனப்பகுதி சோலைக் காடுகள். உலகில் வேறு எந்த பகுதியிலும் காணப்படாத தனித்துவம் மிகுந்த இந்த வனப்பகுதிகள், இந்தியாவில் தமிழகம், கேரளாவில் மட்டுமே உள்ளன. கர்நாடக மாநிலத்தில் சோலைக் காடுகள் சிறிதளவு காணப் படுவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் நீலகிரி, பழநி மலை, ஆனை மலை, அகஸ்தி யர் மலையில் சோலைக் காடுகள் உள்ளன. பழநி மலையில், கடந்த காலத்தில் 31 வகை சோலைக் காடுகள் இருந்ததாகவும், தற்போது 9 ஆக குறைந்துவிட்டதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அழியும் நிலையில் 18 தாவரங்கள்
சோலைக் காடுகள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ள காந்திகிராம பல்கலைக்கழக தாவரவியல் துறை பேராசிரியர் ராமசுப்பு கூறிய தாவது: சோலைக் காட்டு மரங் கள் பொருளாதார முக்கியத்துவம் அற்றவை. ஆனால், சூழல் மண்டலத்தில் இவற்றின் பங்கு அளப்பரியது. கூக்கல் சோலை, செண்பகனூர் சோலை, வட்டக் கானல் சோலை, குண்டன் சோலை, தேன் சோலை, பூதக்கானல் சோலை, டைகர் சோலை, குண்டார் சோலை, கரடிச் சோலை, மதிகெட்டான் சோலை, பாம்பார் சோலை உள்ளிட்டவை, பழநி மலையில் முக்கியமான சோலைக் காடுகள். இப்பகுதியில் 7 வகை புல்வெளி பரப்புகள் இருந்துள்ளன.
தற்போது, அவற்றின் தடம் தெரி யாமல் அழிந்துவிட்டன. இந்த வனப் பகுதிகளிலும், அதன் சுற்றுவட்டாரக் காடுகளிலும் 570-க்கும் மேற்பட்ட பூக்கும் தாவரங்கள், 200-க்கும் மேற்பட்ட பூவாத் தாவரங்கள், 300 வகையான பூஞ்சைகள் பரவிக் காணப்படுகின்றன. இதைத் தவிர, உலகில் வேறெங்கும் காணப்படாத 32 வகையான தாவரங்கள் இங்கு இருந்துள்ளன. அவற்றில், தற்போது 18 வகை தாவரங்கள் அழியும் தருவாயில் இருப்பதாகக் கூறப்படு கிறது. சில தாவரங்கள் முற்றி லும் அழிந்துவிட்டதாகக் கண்டறியப் பட்டுள்ளது. குறிப்பாக, இம்பேஸி யன்ஸ் தங்கச்சி என்ற நீரோடைத் தாவரம், பழநி மலையில் கண்ட றியப்பட்டு, தற்போது அதன் தடம் தெரியாமல் அழிந்துவிட்டது.
செண்பகம், ருத்ராட்சம், ரோடோடென்ரான், குறிஞ்சி, இம் பேஸியன்ஸ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தாவரங்களின் வாழ்விடங் கள் மிகவும் சுருங்கிவிட்டன. இப் பகுதியில் பரவலாகக் காணப்பட்ட காட்டு மாடு, மலை அணில், கேளை ஆடு, கருமந்தி கரடி, கடமான், காட்டுக் கோழிகள், வரையாடு, யானை, பாம்புகள் மற்றும் எண் ணற்ற பறவை இனங்கள், லட்சக் கணக்கான பூஞ்சை இனங்கள் இன்று பெருமளவில் அழிந்து விட்டன.
நகர விரிவாக்கம், தோட்டப் பயிர்களுக்காகவும், நறுமணப் பயிர்களுக்காகவும் காடுகள் அழிப்பு, பூச்சிக் கொல்லி மருந்து கள் உபயோகம், ஆடம்பர தங்கு மிடங்களுக்காகவும் பெருமளவில் சோலைக் காடுகள் அழிந்துவிட்டன. சோலைக் காடுகளின் அழிவில் சுற்றுலா விரிவாக்கத்தின் பங்கு அதிகம் என்றார்.
அந்நியத் தாவரங்கள் பரவல்
ராமசுப்பு மேலும் கூறும்போது, "வெளிநாடுகளில் இருந்து வீடுகளிலும், பூங்காக்களிலும் அழகுக்காக பொருளாதார ரீதியில் இறக்குமதி செய்யப்பட்ட அழகுத் தாவரங்கள், தற்போது பெருமளவு மலைப் பகுதிகளை ஆக்கிரமித்துவிட்டன. இவை களைச்செடிகளாக மாறி, மீதமிருக்கும் சோலைக் காடுகளையும் அழித்து வருகின்றன. பைன், யூகலிப்டஸ், வாட்டில் மற்றும் சிலவகை ஊசியிலை மரக்காடுகள் மண்ணின் தரத்தைக் குறைத்து பல்லுயிர் பெருக்கத்தை பாதித்துவிட்டன.
நன்மை செய்யும் பூச்சிகளையும், நுண்ணுயிர்களையும் முழுவதுமாக அழித்துவிட்டன. மகரந்தச் சேர்க்கை செய்யும் எண்ணற்ற பூச்சிகளை அங்கு இருந்து விரட்டிவிட்டன. பறவை இனங்களும், பாலூட்டிகளும் உணவின்றி இக்காடுகளை விட்டு வெளியேறிவிட்டன. யானை, காட்டு மாடுகளும் தற்போது தீவனப் பற்றாக்குறையால் காடுகளை விட்டு வெளியேறுவதும், இந்த அந்நியத் தாவரங்கள் பரவலே முக்கியக் காரணம். முன்பெல்லாம் கூட்டம் கூட்டமாக வண்ணத்துப் பூச்சிகள் காணப்பட்டன. தற்போது ஒரு சதுர கி.மீட்டரில் ஒரு வண்ணத்துப் பூச்சியைக் கூட கண்டறிய முடியவில்லை. இந்த அந்நிய மரங்களின் இலைகள் உதிர்ந்து விழுந்து மக்கும்போது உண்டாகும் வேதிப் பொருட்கள், மற்ற தாவரத்தின் விதையையும் முளைக்க விடாமல் தடுத்து காட்டின் தரைப்பகுதியை மலடாக்குகின்றன" என்றார்.