

கிரானைட் கற்களை அரசுடமையாக் கக்கோரிய வழக்கில் பி.ஆர்.பழனிச் சாமி உள்ளிட்ட 3 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மதுரை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய் துள்ள மேல்முறையீட்டு மனுவுக்கு பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்ட 3 பேர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம், மேலூர் பகுதி களில் சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது தொடர்பான இரு வழக்குகளில் பிஆர்பி கிரானைட்ஸ் பங்குதாரர்கள் பி.ஆர்.பழனிச்சாமி, அவரது மகன் பி.சுரேஷ்குமார் ஆகியோரும், ஒரு வழக்கில் ராம.சகாதேவனையும் விடுதலை செய்து மேலூர் நீதித் துறை நடுவர் 29.3.2016-ல் உத்தர விட்டார்.
இதை எதிர்த்து மதுரை மாவட்ட ஆட்சியர் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி பி.தேவதாஸ் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மாவட்ட ஆட்சியரின் மேல்முறையீட்டு மனுவுக்கு பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்ட மூவரும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.