

சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்துகொள்வதை தடுக்கும் வகையில் அவர்களுக்கு மன ரீதியிலான பயிற்சி அளிக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சென்னை ஐஐடி வளாகத்தில் நேற்று முன்தினம் ஒரு மாணவி உட்பட 2 பெண்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். 2 பேரின் உடல்களையும் கோட்டூர்புரம் போலீஸார் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு அவர்களின் உடல்கள் நேற்று காலையில் உறவினர்களிடம் ஒப்படைக் கப்பட்டன.
இந்நிலையில் தற்கொலை சம்பவங்கள் தொடர்பாக செய்தி சேகரிப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளின் செய்தியாளர்கள் நேற்று காலை 10 மணியளவில் கிண்டியில் உள்ள ஐஐடி முன்பு குவிந்தனர். ஆனால் ஐஐடி வளாகத்துக்கு வெளியில் இருந்த போலீஸார், அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை.
மாணவியின் தற்கொலை குறித்து கோட்டூர்புரம் போலீஸார் கூறும்போது, “சென்னை ஐஐடியில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ஏராளமான மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இதை தடுப்பதற்காக போலீஸார் சார்பில் விழிப்புணர்வு மற்றும் மனதளவிலான பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. தற்போது அவர்களுக்கு மீண்டும் மனதளவிலான பயிற்சியை அளிக்க முடிவு செய்துள்ளோம்” என்றனர்.
இதுகுறித்து மனோதத்துவ நிபுணர் தேவராஜ் கூறும்போது, “தற்கொலை செய்யும் நபர் இந்த முடிவை உடனே எடுப்பதில்லை. இதைப்பற்றி பலமுறை நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் மறைமுகமாக தெரிவிப்பார்கள். அப்போது அதை நாம் கவனித்து அவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை சரிசெய்தால் தற்கொலை தடுக்கப்படும். பள்ளிகள், கல்லூரிகளில் மனோதத்துவ நிபுணர் ஒருவரை கட்டாயமாக பணிக்கு வைத்திருக்க வேண்டும் என்று அரசு விதி உள்ளது. ஆனால் யாருமே இதை பின்பற்றுவது இல்லை. ஒரு மனோதத்துவ நிபுணரை நியமித்து தொடர்ச்சியாக கவுன்சலிங் கொடுப்பதன் மூலம் கல்வி நிறுவனங்களில் தற்கொலை தடுக்கப்படும்” என்றார்.