

அனைவரும் மண்பானைகளில் பொங்கலிட்டு தமிழ் கலாச்சாரத்தையும், நலிவடைந்து வரும் மண்பாண்டத் தொழிலையும் பாதுகாக்க வேண்டும் என்கின்றனர் மண்பாண்டத் தொழிலாளர்கள்.
பண்டைய காலங்களில் ஒவ்வொரு வீடுகளிலும் மண்பானையில்தான் குடிநீர் இருக்கும். மண்பாண்டங்களில் சமைத்த உணவின் ருசியும், ஆரோக்கியமும் அதிகம் என்பதால் முற்காலத்தில் மண்பாண்டங்கள் வீடுகள்தோறும் பயன்படுத்தப்பட்டன. மண்பாண்டங்கள் தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரங்களில் ஒன்றாகும்.
மண்பாண்டங்களில் சமைக்கும்போது உணவின் மீது வெப்பம் சீராகவும், மெதுவாகவும் பரவுகிறது. இது உணவை சரியான முறையில் சமைக்க உதவுகிறது.
சவால் விடும் திறமை…
இத்தகைய மண்பாண்டங்கள் மட்டுமின்றி குதிரை, யானை போன்ற களிமண் பொம்மைகளை (டெரகோட்டா) வடிவமைப்பதில் மற்ற நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களுக்குச் சவால் விடும் அளவுக்குத் திறமையானவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த கலைஞர்கள்.
பெரிய அளவிலான மண்பானைகளில் தண்ணீர் பிடித்து வைப்பது, நெல் அவிப்பது, சமையல் செய்வது, கோழிகளை அடைப்பதற்கு, சிறு தெய்வங்களுக்கு விளக்கேற்றும் வகையிலான மாடங்கள், அகல் விளக்குகள் எனப் பலவற்றுக்கும் மண்பாண்டங்களையே பிரத்தியேகமாக பயன்படுத்தியதால் இந்த தொழிலை நம்பியிருந்த தொழிலாளர்களுக்கு தினமும் நல்ல வருமானம் கிடைத்து வந்தது.
தற்போது, பெருகி வரும் விஞ்ஞான வளர்ச்சியாலும் நாகரிகம் என்ற பெயரில் அலுமினியம், பித்தளை, சில்வர், பீங்கான், பிளாஸ்டிக் பொருட்கள் அதிகமாக இடம் பிடித்துள்ளதாலும் மண்பானைகளின் பயன்பாடு குறைந்துவிட்டது. அதிலும், நகர்ப் பகுதிகளில் முற்றாக மறைந்துவிட்டது.
இதனால், பொங்கல் பண்டிகையின்போது மண்பானைகள், அடுப்புகளைத் தயாரித்து விற்பனை செய்வதில் இருந்தும், கார்த்திகை தீபத்துக்கு அகல் விளக்குகள் தயாரித்து விற்பதைக் கொண்டும் கிடைக்கும் வருவாயில்தான் ஆண்டு முழுவதும் குடும்பத்தை நடத்த வேண்டிய நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது.
தற்போது, கிராம மக்கள் மட்டுமே மண்பானைகளில் பொங்கலிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளதால் கிராமங்களில் மட்டுமே மண்பானைகளை விற்பனை செய்ய முடிகிறது என்று தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
இப்படியாக களி மண்ணைப் பிசைந்து, தமிழர்களின் பாரம்பரியத்தை உலகறியச் செய்துவரும் மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு மண்பாண்ட தொழில்கூடம், சுழலும் மின்சக்கரம், உதவித்தொகை, மண்பாண்டத் தயாரிப்பு பயிற்சி, தயாரிப்புகளை சந்தைப்படுத்துவது என பல்வேறு சலுகைகளை அரசு அறிவித்துள்ளது.
ஆனால், எந்த திட்டமும் உரிய பயனாளியைச் சென்றடையாததும், இவற்றை எல்லாம் செய்வதற்குத் தேவையான மூலப்பொருளான களி மண் எடுக்க அரசு தடைவித்துள்ளதுமே மண்பாண்டத் தொழில் கடுமையாக முடங்கியுள்ளதற்கு காரணம் என்கின்றனர் மண்பாண்டத் தொழிலாளர்கள்.
இதுகுறித்து மழையூரைச் சேர்ந்த மண்பாண்டத் தொழிலாளர் புஷ்பராஜ் கூறியது:
மழையூர் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் மண்பாண்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. அனைவருமே எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். பொங்கல் பண்டிகையின்போது மண்பானைகள், அடுப்புகளைத் தயாரித்து விற்பனை செய்வதில் கிடைக்கும் தொகையில்தான் ஆண்டு முழுவதும் குடும்பம் நடத்த வேண்டிய சூழல் உள்ளது. இதைவிட்டால் எங்களுக்கு மாற்றுத் தொழிலும் கிடையாது.
இங்குள்ளவர்களின் வீடுகள் குடிசைகளாக வும், சிறு வீடுகளாக வுமே இருப்பதால் தயாரிக்கும் மண் பாண்டங்களை வெயில், மழையில் பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழையூரில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம் தொடங்கப்பட்ட தொழிற்கூடம் கட்டுமானப் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அவ்வப்போது தயாரிக்கும் மண்பாண்டங்களை இருப்பு வைத்திருந்து விற்க முடியாது என்பதால், அதிகமோ, குறைவோ என எதையும் பொருட்படுத்தாமல் கேட்கும் விலைக்கு விற்க வேண்டியுள்ளது. இந்த தொழிலில் பெரிய அளவில் லாபம் இல்லாததால் இளைஞர்கள் புறக்கணித்து வருகின்றனர்.
இதுகுறித்து சிவலிங்கம் கூறியது:
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு குடும்பத்திலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பானைகள், மூடிகள், அடுப்புகளை தயாரித்து மாட்டு வண்டிகள் மூலம் ஏற்றிச் சென்று சுற்று வட்டாரத்தில் உள்ள சந்தைகளில் விற்பனை செய்தோம். கடந்த சில ஆண்டுகளாகவே மண்பானைகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்ததால் உற்பத்தியும் கடுமையாகச் சரிந்துள்ளது. குடும்பத்துக்கு சராசரியாக 100 பானை மட்டுமே தயாரிக்கப்படுகிறது. ஒரு கிலோ அரிசி வேகக்கூடிய பானையை ரூ.60-க்கும், அடுப்பை ரூ.100-க்கும் விற்பனை செய்கிறோம்.
கிராமப் பகுதிகளுக்கு தலைச்சுமையாக சுமந்து கொண்டுசென்றும், கடைவீதிகளில் ஆங்காங்கே மொத்தமாக அடுக்கி வைத்தும் விற்பனை செய்துவருகிறோம். மண்பானைகளை பயன்படுத்துவதை அநாகரிகமாகக் கருதும் நிலை மக்களிடம் மாற வேண்டும். அப்போதுதான், மண்பாண்டத்தொழில் நிலைக்கும்.
ஆவுடையார்கோவில் அருகேயுள்ள வளத்தக்காடைச் சேர்ந்த டெரகோட்டா ஆர்.தங்கையா கூறியது:
மண்பாண்டங்களோடு களி மண்ணால் செய்யப்படும் யானை, குதிரை, சிங்கம், பூந்தொட்டிகள் போன்ற தயாரிப்புகள் யாவிலும் தமிழர்களின் கைவண்ணத்துக்கு ஈடு இணை ஏதுமில்லை என வெளிநாட்டினர் பாராட்டுகின்றனர்.
ஆனால், உள்ளூரில் இந்தக் கலைகள் அவ்வளவாக மதிக்கப்படுவதில்லை. வெளிநாடுகளில் களிமண் பொம்மைகளை விற்பனை செய்வதற்கென்றே கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் மண்பாண்டங்களைத் தயாரிப்பதற்காக தொழிற்கூடங்கள் அமைக்கப்படுமென்ற அரசின் உத்தரவு செயல்பாடின்றி உள்ளது.
குளங்களில் இருந்து களிமண் எடுக்கத் தடை விதித்து தமிழரின் பாரம்பரியத்துக்கு முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு மழைக்கால நிவாரணமாக குடும்பத்துக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படுமென தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்த தொகைக்கு மாவட்டத்தில் 2,000 பேர் விண்ணப்பித்ததில் சுமார் 450 பேருக்கு மட்டுமே நிவாரணம் கிடைத்தது. அதேபோல, மண்பானைகள் தயாரிக்கப்யன்படுத்தும் சக்கரத்துக்குப் பதிலாக இலவசமாக மின்சக்கரம் வழங்கப்படுமென அரசு அறிவித்ததே தவிர, அதற்குப் பிறகு அத்திட்டம் என்னவாயிற்று என்றே தெரியவில்லை.
மண்பாண்டங்கள் மீது மக்களிடையே விருப்பம் குறைந்துவரும் நிலையில், அரசும் அறிவித்த திட்டங்களை முறையாகச் செயல்படுத்தாததால் மண்பாண்டத் தொழிலாளர்களும், தொழிலும் மிகவும் நலிவுற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இது தொடருமேயானால் செல்போன் உள்ளிட்டவற்றை ஆன்லைனில் வாங்குவதுபோல எதிர்காலத்தில் பானைகளையும் வெளிநாட்டினரிடம் இருந்து வாங்க வேண்டிய அவல நிலை தமிழர்களுக்கு ஏற்படலாம்.
பண்டிகைக் காலங்களில் கைத்தறி துணிகளை வாங்கி நெசவாளர்களின் துயர் துடைப்பதைப்போல, பொங்கல் பண்டியின்போது பாரம்பரிய முறைப்படி மண்பானைகளில் பொங்கலிட்டால் மண்பாண்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். பயன்படுத்துவோரின் உடலும் ஆரோக்கியம் அடையும் என்றார்.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் எ.மணிகண்டன் கூறியது:
மண்பானை தயாரிப்பு என்பது சுமார் 3,700 ஆண்டுகளுக்கு முந்தையது என உறுதியாகி இருப்பதன் மூலம் மண்பாண்டங்கள் செய்யும் தொழில் தமிழகத்தில் இருந்துதான் உலகறியச் செய்யப் பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது. மண்பானைகளை ஒவ்வொரு வீடுகளிலும் பயன்படுத்துவதும்கூட தமிழர்களின் அடையாளமாகத் திகழும்.
இதுகுறித்து கதர் வாரிய அலுவலர்கள் கூறியபோது,
“தகுதியான தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், களிமண் பொம்மைகள் தயாரிப்பது குறித்து அவ்வப்போது பயிற்சியும் அளிக்கப்படுகிறது. தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கவும் ஆலோசனை வழங்கப்படுகிறது” என்றனர்.